உத்தரகாசி இயற்கை அனர்த்தம்: 'நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்தொழிப்பதை மத்திய-மாநில அரசுகள் கைவிட வேண்டும்: சீமான்..!
Seeman urges urgent rescue of people trapped in Uttarakhand landslides and floods
உத்தரகாசி - ஹர்ஷில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக அப்பகுதியிலிருந்து 10,000 தேவதாரு மரங்களை (ஊசியிலை மரங்கள்) அரசு வெட்டியதே பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டு கூறியுள்ளதாவது:
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக, மக்களின் குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்துள்ள பெருந்துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் உட்பட மேலும் பலர் பெருவெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ள செய்தி சொல்லொணா துயரத்தைத் தருகின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தாராலி கிராமத்திற்கு அருகில் உத்தரகாசி - ஹர்ஷில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக அப்பகுதியிலிருந்த 10,000 தேவதாரு மரங்களை (ஊசியிலை மரங்கள்) அரசு வெட்டியதே பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலச்சரிவு ஏற்பட முதன்மைக் காரணமெனக் கூறப்படுகிறது. வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் நம்முடைய பாதுகாப்பு அரண்களாக விளங்கும் மலைகள், காடுகள், மரங்கள், நீர் வழிப்பாதைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழிப்பது எத்தகைய பேராபத்தை ஏற்படுத்துகிறது என்பதை, இனியாவது நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

மக்கள் வசதியாக வாழ்வதைக் காட்டிலும் பாதுகாப்பாக வாழ்வது மிக முக்கியம். மக்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாறவிட்ட பிறகு, மரங்களை வெட்டி, கோடிகளைக் கொட்டி அமைத்த நெடுஞ்சாலையால் யாருக்கு என்ன பயன்? என்ற கேள்விக்கு எவரிடத்தில் பதிலுண்டு?
ஆகவே, இனி வரும் காலங்களில் உயிர்கள் வாழ உகந்த நிலமாக நாம் வாழும் பூமியை அடுத்த தலைமுறையிடம் கையளிப்பதுதான் ஆகச்சிறந்த வளர்ச்சி என்பதை உணர்ந்து, தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்தொழிப்பதை இனியாவது மத்திய-மாநில அரசுகள் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். உத்தரகாசி மலைச்சரிவு – பெருவெள்ளப் பேரழிவில் சிக்கியுள்ள மக்களைக் காக்க மீட்புப்பணிகளை விரைவுபடுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman urges urgent rescue of people trapped in Uttarakhand landslides and floods