விமானத்தில் கடத்திய ரூ.9 கோடி மதிப்பிலான கஞ்சா சிக்கியது..இருவர் கைது!
Rs. 9 crore worth of cannabis was seized in the airplaneTwo arrested
அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.9 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து 2 வாலிபர்களை கைது செய்தனர்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வழியாக வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் விமான நிலையத்தை படம் எடுக்க வந்ததாகவும், ஒருவரை வரவேற்க வந்ததாகவும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர அவர்களிடம் விசாரணையில் இறங்கினர். அப்போது விசாரணையில் , அபுதாபியில் இருந்து வந்த விமான பயணி ஒருவர் கொண்டு வந்த கஞ்சாவை பெற்றுச் செல்ல வந்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து விமான பயணி யார்? என போலீசார் விசாரணையில் இறங்கிய போது அந்த பயணி காரில் தப்பித்துச் சென்று விட்டார். இதனிடையே கண்காணிப்பு காமிரா மூலம் அவர் தப்பித்துச் சென்ற வாகனத்தை போலீசார் மடக்கிபிடித்து சோதனை செய்தபோது அந்த காரில் அந்த நபர் இல்லை.
அதேநேரம் அவரது உடமையில் 18 கிலோ கலப்பின கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.9 கோடி ஆகும். இது தொடர்பாக விமான நிலையம் அருகே பிடிபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் கண்ணூர் ரிகில், தலச்சேரி ரோஷன் ஆர்.பாபு என தெரியவந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
English Summary
Rs. 9 crore worth of cannabis was seized in the airplaneTwo arrested