மத்திய அரசின் 'ஞான பாரதம்' திட்டம்; டிஜிட்டல் மயமாகும் ஒரு கோடி ஓலைச்சுவடிகள் மற்றும் காகித சுவடிகள்..! - Seithipunal
Seithipunal


நாட்டில் உள்ள விலைமதிப்பில்லாத ஒரு கோடிக்கும் அதிகமான பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் காகிதச் சுவடிகளை, 'டிஜிட்டல்' ஆவணமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பல நுாறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள் மற்றும் கையெழுத்து சுவடிகள் நம் நாட்டில் உள்ளன.

முக்கியமாக தத்துவம், அறிவியல், மருத்துவம், இலக்கியம், வழிபாடுகள், சடங்குகள், கணிதம், ஜோதிடம், வாஸ்து மற்றும் கலைகள் உள்ளிட்டவை தொடர்பான ஓலை சுவடிகள் உள்ளன. அத்துடன், நாடு சுதந்திரம் அடையும் முன், தேசத் தலைவர்கள் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் போன்றவையும் உள்ளன.

இவாறான பொக்கிஷங்கள், நம் நாட்டின் பன்முகத் தன்மைக்கான சான்றுகளாகவும், அறிவின் கருவூலமாகவும் உள்ளன. அவற்றை பாதுகாப்பது சவால் நிறைந்ததாக உள்ள நிலையில் மத்திய அரசு அதனை பாதுகாக்க தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, 'ஸ்கேனர்'களின் வாயிலாக அவற்றை ஸ்கேன் செய்து, டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றி, சர்வரில் பாதுகாப்பது மற்றும் உலகில் உள்ள அனைவரும் அணுகும் வகையில் பரவலாக்குவது போன்றவற்றுக்காக, 'ஞான பாரதம்' என்ற திட்டத்தை மத்திய கலாசார துறை அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள பழமையான சுவடிகள் அடையாளம் காணப்படுவதுடன், அவை சேகரிக்கப்பட்டு, பாரம்பரிய அறிவு சொத்தாக மாற்றப்படள்ளன. இப்பணிக்காக, அதிக திறன் வாய்ந்த முப்பரிமாண கேமராக்கள் உள்ளிட்ட சாதனங்களும் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவேற்றும் முன், அவற்றின் உண்மை தன்மையை ஆராய்ந்து, வல்லுனர் குழு சான்றளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஆவணங்களை படித்தறியவும், எடுத்துரைக்கவும், துறை சார்ந்த வல்லுனர்கள், ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களும் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பல்வேறு விதமான ஆவணங்களை கையாள்வது குறித்து, இளைஞர்களுக்கு பயிற்சியும் தரப்படவுள்ளதாவும், குறித்த பணிகளை மேற்கொள்ள, 20 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளது. அத்துடன், 10 நிறுவனங்களை இப்பணியில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது.

 இந்த 'ஞான பாரதம்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, சென்னையில் உள்ள கீழ்திசை சுவடிகள் நுாலகம், கொல்கட்டாவின் ஏசியடிக் சொசைட்டி, ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலை, பிரயாக்ராஜில் உள்ள ஹிந்தி சாகித்ய சம்மேளனம் போன்றவற்றின் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One crore manuscripts and paper manuscripts to be digitized


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->