மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜி நியமனம்; போலி கையெழுத்தினால் வந்த நினை; மம்தா பானர்ஜிக்கு அடிமேல் அடி..!
Ritabrata Banerjee Appointed as Leader of the Opposition in West Bengal
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இந்த தேர்தலில் படுதோல்வியடைந்தது. பாஜக தனிப்பெரும்பான்மையாக வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
முக்கியமாக முதலமைச்சராக இருந்த மம்தா பானர்ஜியும் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியை தழுவினார். இதனால், ஆட்சியை இழந்த அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆக முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சொவன்தேப் சட்டோபாத்யாய் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்களின் கையெழுத்தைப் பெற்று சபாநாயகர் ரதிந்திர போஸிடம் கடிதம் அளிக்கப்பட்டது.

ஆனால், அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்துக்களில் சில போலியானவை என ரிதப்ரதா பானர்ஜியும், சாந்தீபன் சஹாவும் கூறியதை அடுத்து, இது தொடர்பாக மேற்கு வங்க குற்ற புலனாய்வுத் துறை தனது விசாரணையைத் தொடங்கியது.
இதையடுத்து, ரிதப்ரதா பானர்ஜி, சாந்தீபன் சஹா ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து மம்தா பானர்ஜி அதிரடியாக நீக்கினார்.
மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கை காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து ரிதப்ரதா பானர்ஜிக்கு ஆதரவாக 60 எம்எல்ஏக்கள் திரண்டனர். அதன்பின்னர் அவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

இந்நிலையில், ரிதப்ரதா பானர்ஜியை சட்டமன்ற கட்சித் தலைவராகவும், சாந்தீபன் சஹா, சியோலி சஹா, சபினா யாஸ்மின் ஆகியோரை துணை எதிர்க்கட்சித் தலைவர்களாகவும், அக்ருஸ்ஸமானை தலைமை கொறடாவாகவும் நியமிக்கக் கோரும் கடிதத்தை அவர்கள் இன்று சபாநாயகரிடம் வழங்கினர். இந்த கடிதத்தில் மொத்தம் 58 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இதனை ரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் ரதிந்திர போஸ் அறிவித்த நிலையில் பின்னர் கடிதத்தை ஏற்பதாக அறிவித்தார். சபாநாயகரின் அறிவிப்பை அடுத்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ரிதப்ரதா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிதப்ரதா பானர்ஜி கூறியதாவது;

மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது நாங்கள் இன்னும் ஒரு படி மேலே செல்ல விரும்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது திரிணமூல் காங்கிரஸின் சட்டமன்றக் குழுவுக்கு தலைமை ஆலோசகராக இருந்து மம்தா பானர்ஜி எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும், இது தொடர்பாக அவருக்கு கடிதம் எழுத உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அபிஷேக் பானர்ஜிக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் நாடாளுமன்ற உறுப்பினர். அவர்தான் சபாநாயகருக்கு போலியான கடிதத்தை அளித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக சபாநாயகர் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு சபாநாயகர் கடிதம் எழுத முடியும் என்று கூறியுள்ளார். அத்துடன், அபிஷேக் பானர்ஜிக்கு பொதுமக்களோடு தொடர்பு இல்லை என்றும், இருந்திருந்தால் கடந்த 26 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்திருக்க மாட்டார். அன்று அவரை ஒரு திருடனை தாக்குவதைப் போல மக்கள் தாக்கினர் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
English Summary
Ritabrata Banerjee Appointed as Leader of the Opposition in West Bengal