கச்சா எண்ணெய் தட்டுப்பாடு; இந்தியாவில் தண்ணீர், பீர், கண்ணாடி பாட்டில்கள் விலை உயரும் அபாயம்..!
Risk of Rising Prices for Water and Beer in India
கோடைகாலம் தொடங்கியுள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் போர் காரணமாக இந்தியாவின் 06 பில்லியன் டாலர் (சுமார் இந்திய மதிப்பில் ரூ600 கோடி ) மதிப்புள்ள பாட்டில் தண்ணீர் மற்றும் கண்ணாடி பாட்டில் தொழில்துறையைச் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியை ஈரான் மூடியுள்ளதால், உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் விலைஉயர்ந்துள்ள நிலையில், தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
'டேட்டா ஃபார் இந்தியா' நடத்திய ஆய்வின்படி, நகர்ப்புறங்களில் சுமார் 15% குடும்பங்களும், கிராமப்புறங்களில் 6% குடும்பங்களும் தங்களின் குடிநீர் தேவைக்காக பாட்டில் தண்ணீரைச் சார்ந்துள்ளன. இந்த பாட்டில் தண்ணீரை நம்பியிருப்பது செலவு மிக்கதாக உள்ளது. ஆனால், தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்ளிட்ட காரணங்களால், பல பகுதிகளில், குறிப்பாக கோடை காலத்தில், சுத்தமான நீர் கிடைப்பது ஒரு சவாலாக உள்ளது.
அதன்படி, கடந்த (மார்ச்) மாதம், சந்தையில் முன்னணியில் உள்ள பிஸ்லெரி நிறுவனம் தண்ணீர் விலையை 11% உயர்த்தியுள்ளது. பெய்லி மற்றும் கிளியர் பிரீமியம் வாட்டர் போன்ற பிராண்டுகளும் தங்கள் விலைகளை உயர்த்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரின் விலை உயர்ந்ததற்குக் காரணம், கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்ததே காரணம் என மகாராஷ்டிர பாட்டில் தண்ணீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜய்சிங் துப்பால் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில், ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 119 டாலரை எட்டியது.
அதாவது, பாலியெத்திலீன் டெரெப்தாலேட் Polyethylene Terephthalate (PET) பிளாஸ்டிக் பாட்டிலுக்கான ரெசின் துகள்களைத் தயாரிக்க கச்சா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் துகள்கள் சூடுபடுத்தப்பட்டு, அச்சுகளின் வழியாகச் செலுத்தப்பட்டு PET ப்ரீஃபார்ம்களாக உருவாக்கப்படுகின்றன.
இவ்வாறு ப்ரீஃபார்ம்களின் (preforms) விலை ஒரு கிலோவுக்கு 115 ரூபாயிலிருந்து சுமார் 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. ப்ரீஃபார்ம்களின் விநியோகத்திலும் பற்றாக்குறை உள்ளது என்றும், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சுமார் 20% பாட்டில் உற்பத்தி ஆலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் விஜய்சிங் துப்பால் தெரிவித்துள்ளார்.
அதேப்போன்று, கண்ணாடி பாட்டில்களைத் தயாரிப்பவர்களும் இந்தப் போரின் தாக்கத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கு இயற்கை எரிவாயு விநியோகம் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால், கண்ணாடி உற்பத்தியாளர்கள் தங்கள் உலைகளை இயக்குவது கடினமாகியுள்ளது.
ஏனெனில், ஹைனெக்கன் மற்றும் கார்ல்ஸ்பெர்க் (Heineken and Carlsberg ) போன்ற முக்கிய உலகளாவிய மதுபானத் தயாரிப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மதுபானத் தயாரிப்பாளர்கள் சங்கம், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், கண்ணாடிப் பாட்டில்களின் விலை சுமார் 20% உயர்ந்துள்ளதாகவும், பீர் விலையை 12-15% வரை உயர்த்துமாறு மாநிலங்களை அணுகும்படி தனது கிளை நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் இந்திய மதுபான நிறுவனங்களின் கூட்டமைப்பும் விலையை உயர்த்துமாறு மாநிலங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
அதேப்போன்று மருந்து நிறுவனங்கள் மற்றும் மதுபான ஆலைகளால் பெருமளவில் பயன்படுத்தப்படும், நிறம் பூசப்பட்ட பழுப்பு நிறக் கண்ணாடி பாட்டில்களின் முன்னணி உற்பத்தியாளரான விட்ரம் கிளாஸ் (Vitrum Glass ) இயற்கை எரிவாயுவின் விநியோகத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களே விலை உயர்வுக்குக் காரணம் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வித்தோப் ஷெட் கூறியுள்ளார்.
கண்ணாடி உற்பத்தியாளர்கள் தங்கள் உலைகளை இயக்குவதற்கு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர். இந்த உலைகள் மணல், சோடா சாம்பல், சுண்ணாம்புக்கல் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடி ஆகியவற்றை உருக்கி, உருகிய கண்ணாடிக் கட்டிகளாக மாற்றி, பின்னர் அவற்றை பாட்டில்களாக வடிவமைக்கின்றனர்.
English Summary
Risk of Rising Prices for Water and Beer in India