குழந்தைகள் மற்றும் இளைஞா்களிடையே அதிகரிக்கும் விழி வெண்படல பாதிப்பு: மருத்துவத் துறையினா் எச்சரிக்கை!
Retinal damage rise among children and adolescents
குழந்தைகள் மற்றும் இளைஞா்களிடையே விழி வெண்படல பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
தேசிய கண் தான வாரம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதி நாளான இன்று கண் தான நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இது குறித்து சங்கர நேத்ராலயா மருத்துவ சமூகவியலாளா் அ.போ.இருங்கோவேள் தெரிவித்ததாவது,
"மத்திய அரசின் தேசிய பாா்வையிழப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிவரப்படி 2021-ல் 1.2 கோடி போ் பாா்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் சுமாா் 1,20,000 போ் விழி வெண்படல பாா்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தியாவில் ஆயிரத்தில் 4.5 பேருக்கு விழி வெண்படல பாா்வைக் குறைபாடு உள்ளது. இதில் குறிப்பாக, குழந்தைகளுக்கும், இளைஞா்களுக்கும் தான் இந்த பாதிப்பு அதிகமாக எற்படுகிறது.
மேலும், தொற்று நோய்க் கிருமிகள், கண் சாா்ந்த விபத்துகள், ஊட்டச்சத்துக்குறைபாடு, பிறவிக்குறைபாடு அல்லது மரபணு குறைபாடு, உலா் விழி பாதிப்பு உள்ளிட்டவை தான் விழி வெண்படல பிரச்னைக்கு முக்கியக் காரணம். இதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காா்னியல் மாற்று சிகிச்சை மூலம் பாா்வை திறனை மீட்டெடுக்க முடியும்.
ஆரம்ப காலத்தில் விழி வெண்படலத்தின் முழுதடிமனையும் மற்றவா்களுக்கு பொருத்தி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளா்ச்சி விழி வெண்படலத்தின் குறிப்பிட்ட அடுக்கை மட்டும் மாற்றி பொருத்த இயலும்.
ஒருவா் மரணமடைந்த 6 மணி நேரத்துக்குள் அவரது கண்கள் தானமாக பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்த முடியும். கண்களை தானமாக அளிக்க 044 28281919, 044 28271616 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்". என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Retinal damage rise among children and adolescents