நாட்டையே உலுக்கிய ஜெய்சால்மர் பேருந்து தீ விபத்து! பிரதமர் மோடி இரங்கல்!
rajasthan bus accident pm modi condolence
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தும், 16 பேர் காயமடைந்தும் பரிதாபம் ஏற்பட்டது.
குளிர்சாதன வசதி மற்றும் படுக்கையுடன் கூடிய அந்த பேருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஜெய்சால்மரில் இருந்து 57 பயணிகளுடன் புறப்பட்டது. ஜெய்சால்மர்–ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, பேருந்தின் பின்புறம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தியபோதிலும், சில நொடிகளில் தீ முழு வாகனத்தையும் சூழ்ந்தது. கடும் புகைமூட்டம் காரணமாக பயணிகள் பலர் வெளியேற முடியவில்லை.
தீ பரவியதை கண்ட சுற்றுப்புற மக்கள் மற்றும் அருகிலிருந்த ராணுவ வீரர்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறை, தீயணைப்பு வீரர்கள், மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த 16 பேர் ஜோத்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அடையாளம் காண முடியாதவர்களுக்கான டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என காவல் துறை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, “ஜெய்சால்மர் பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்தது வேதனையாக உள்ளது. அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என பதிவு செய்தார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார்.
English Summary
rajasthan bus accident pm modi condolence