இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ‘மெலோடி’ சாக்லெட் பரிசளித்த பிரதமர் மோடி; 'கேலிக்கூத்தாக்கும் செயல்' என ராகுல் காந்தி விமர்சனம்..!
Rahul Gandhi has criticized Prime Minister Modi for gifting a Melody chocolate to Italian Prime Minister Meloni
பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக இத்தாலி சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு பிரதமர் 'மெலோடி' சாக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ள நிலையில், மோடியின் செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''இந்தியர்கள் தலைக்கு மேலேயே ஒரு பொருளாதார சூறாவளி சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ இத்தாலியில் மிட்டாய் விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.
இங்கே விவசாயிகளும், இளைஞர்களும், பெண்களும், தொழிலாளர்களும், சிறு வணிகர்களும் கண்ணீர் வடிக்கின்றனர். அங்கே பிரதமர் மோடி சிரித்துக் கொண்டு ரீல்ஸ் எடுக்கிறார். பாஜகவினர் அதற்கு கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இது தலைமைப் பண்பு அல்ல. மாறாக அதை கேலிக்கூத்தாக்கும் செயல்'' என்று விமர்சித்துள்ளார்.
முன்னனதாக ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இறுதியாக செவ்வாய்க்கிழமை மாலை ரோம் நகர் சென்றார். அங்கு அவர் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசிய நிலையில், இருவரும் இணைந்து இரவு உணவு சாப்பிட்டனர்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்திருந்தார். அதில், "ரோம் நகரில் தரையிறங்கியதும், பிரதமர் மெலோனியை இரவு உணவின்போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கொலோசியம் அரங்குக்குச் சென்றோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
அத்துடன், இரு தலைவர்களும் ரோம் நகரின் வீதிகளில் ஒரே காரில் பயணித்தனர். அதற்கு முன்னதாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பிரதமர் மோடியை சமூக ஊடகங்களில், அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, "ரோம் நகருக்கு வருக, என் நண்பரே!" என்று வரவேற்று இருந்தார்.
அத்தோடு, பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தில், இரு தலைவர்களும் இரவில் கொலோசியம் அரங்குக்குள் அருகருகே நிற்பது காண முடிந்தது.
இந்த சூழலில், மோடியை கடுமையாக சாடிய ராகுல்காந்தி, ''தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லாதீர்கள், மின்சார வாகனங்களைப் பயன்படுத்துங்கள்'' என்று நாட்டு மக்களுக்கு கூறி இருக்கிறார். ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்குச் செல்கிறார் என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், இதையெல்லாம் பொதுமக்கள் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர் என்றும், நாட்டில் ஒரு பொருளாதார புயல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடுமையான பணவீக்கம் ஏற்படும், அனைத்துப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும். அதோடு, உரங்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வர இருக்கும் காலங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கப் போகின்ற என்றும், நாடு இதுவரை கண்டிராத அளவுக்கு விலைவாசி உயர்வு ஏற்படப் போகிறது. அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்பட இருப்பதால், விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபடும். ஆனால், இந்த பொருளாதார புயலின் தாக்கம் அதானி, அம்பானி, மோடி ஆகியோரை சிறிதும் பாதிக்காது என்றும் விமர்சித்துள்ளார். . அதாவது, அவர்கள் தங்கள் ஆடம்பர மாளிகைக்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த பொருளாதாரப் புயலால் பாதிக்கப்படப் போவது ஏழை எளிய மக்கள்தான் என்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Rahul Gandhi has criticized Prime Minister Modi for gifting a Melody chocolate to Italian Prime Minister Meloni