நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; ரூ.1,500 கோடி சம்பாதித்துள்ளாரா பயிற்சி மைய உரிமையாளர்..?
Has the coaching center owner an accused in the NEET question paper leak scandal amassed Rs 1500 crore
நீட் 2026 வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகராஷ்டிரா மாநிலம், லாத்தூர் நகரில் 'ரேணுகா கேரியர் சென்டர்' எனும் பெயரில் நீட் பயிற்சி நிலையம் உள்ளது.
இதன் உரிமையாளரான சிவராஜ் ரகுநாத் மோடேகாவ்ங்கர், இதுபோல் ஒரு தனியார் பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அத்துடன், தானே ஒரு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சிபிஐ விசாரணையில் சிக்கியுள்ள இந்த சிவராஜுக்கு, 2025 நீட் வினாத்தாளும் தேர்வுக்கு முன்பாகவே கிடைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையும் சேர்த்து அவர் தற்போது வரை ரூ.1,500 கோடி சம்பாதித்திருப்பதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சிவராஜின் பயிற்சி மையத்தின் பல மாணவர்கள் நீட் 2025 தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றியைப் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தம் 19 மாணவர்கள் பல்வேறு எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களில் தேர்வாகியுள்ளனர். இவர்களில், டெல்லி எய்ம்ஸில் 02, ஹைதராபாத் எய்ம்ஸில் 05, போபால் மற்றும் வாராணசி எய்ம்ஸ்களில் தலா மூவரும் தேர்வாகி பயில்கின்றனர்.
தனக்கு நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பாகவே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்துள்ளதாகவும், இதை பணமாக்க வேண்டி சிவராஜ், பொருளாதார ரீதியாக வசதி படைத்த குடும்பங்களின் மாணவர்களையே தன் பயிற்சி நிலையத்தில் சேர்த்துள்ளார்.
அதேசமயம், சராசரிக்கும் மேலான கல்வித் திறனைக்கொண்ட மாணவர்களைத் தேர்வு செய்துள்ளார். அந்த மாணவர்களின் குடும்பத்தினருடன் ரகசிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், தேர்வு நடைபெறுவதற்கு கடைசி 15 நாட்களுக்கு முன்பாக, இந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வினாத்தாள் கைக்குக் கிடைத்த உடனேயே, அதில் உள்ள கேள்விகள் மற்றும் பதில்களை மாணவர்கள் மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் செயல்முறை தொடர்பான காட்சிப் பதிவும் சிபிஐ வசம் சிக்கியுள்ளது. அந்தக் காட்சிப் பதிவில், சிவராஜ் தனது பயிற்சி வகுப்பில் மாணவர்களிடம் தேர்வு குறித்துப் பேசிக்கொண்டிருப்பது தெரிகிறது. ஒரு மாணவர், மாதிரித் தேர்வில் இருந்த கேள்விகள் அனைத்தும் தேர்வில் இருந்தன என்றும், கூறுவதும் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிப் பதிவை சிவராஜ் புதிய மாணவர்களை சேர்க்கவும் பயன்படுத்திள்ளார். அத்துடன், சிபிஐ-யில் வெளியாகும் தகவலின்படி, புனேவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் மனிஷா வாக்மாரே என்பவரின் வாயிலாக, பேராசிரியர் பி.வி. குல்கர்னி மற்றும் மனிஷா மாண்ட்ரே ஆகியோருடன் சிவராஜுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிமுகமாகி நட்பு கிடைத்துள்ளது.
தற்போது சிபிஐ விசாரணையில் தற்போது விவேக் பாட்டீல் என்ற புதிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சிவராஜின் கும்பல்தான் அவருக்கும் கசிந்த வினாத்தாள்களை வழங்கியிருக்கலாம் என சிபிஐ சந்தேகித்துள்ளது. முக்கிய பயிற்சி மாஃபியாவுக்கும் சில என்டிஏ அதிகாரிகளுக்கும் இடையே கூட்டுச் சதி இருந்திருக்கும் என்ற கோணத்தில் சிபிஐ விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Has the coaching center owner an accused in the NEET question paper leak scandal amassed Rs 1500 crore