''பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்''; ராகுல் காந்தி..!
Rahul Gandhi demands resignation of Prime Minister Modi and Home Minister Amit Shah
நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தகுதி தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்டவற்றிற்கு, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இணையத்தில் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று (20ஆம் தேதி), நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். இதனை காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினர் தடுக்க முயன்ற நிலையில் தள்ளு முள்ளு ஏற்பட்டத்து. இதன்போது போலீசார்- போராட்டக்காரர்கள் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இதில் இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா போராட்டக் குழு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி இல்லத்தில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் நோக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிடோர் பேரணி சென்றனர். அவர்களை காவல்துறையினர் பாதியில் நிறுத்தியதைத் தொடர்ந்து அந்த இடத்திலேயே அமர்ந்து ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''மாணவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட வன்முறைச் செயல்கள் குறித்துப் பதிலளிக்கக் கோரி, நாங்கள் பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றோம். இவ்விவகாரத்தில் எந்தப் பொறுப்பையும் ஏற்கவோ அல்லது நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவோ அரசு விரும்பவில்லை. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்ததற்காகப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Rahul Gandhi demands resignation of Prime Minister Modi and Home Minister Amit Shah