புதுவையில் பந்த் அறிவித்த ஏஐடியூசி!
Puducherry Strike AITUC
மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பின் பேரில், மே 20ஆம் தேதி நாடுமுழுவதும் நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் புதுச்சேரியும் பங்கேற்கிறது.
இதுகுறித்து ஏஐடியூசி தலைமையிலான ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மத்திய அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருவதை எதிர்த்து, மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு ஏஐடியூசி மாநில செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகிக்க, பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத் திட்டங்களாக, மே 6ஆம் தேதி சுதேசி மில் அருகே பொதுக்கூட்டம், 15, 16, 17 தேதிகளில் வேன் பிரச்சாரம், 20ஆம் தேதி பந்த் மற்றும் மறியல் போராட்டங்களை ராஜா தியேட்டர் உள்ளிட்ட முக்கிய மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதியம் ₹26,000 வழங்கப்பட வேண்டும், ஒப்பந்தம் உள்ளிட்ட சுரண்டல் முறைகள் நின்று, அனைவருக்கும் சம ஊதியம், ₹9,000 ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.