பஞ்சாப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி 9-ந்தேதி பார்வையிடுகிறார்!
Prime Minister Modi to visit flood hit areas in Punjab on 9th
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 9ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் செல்கிறார்.
பஞ்சாப்பில் மிகுந்த பாதிப்புக்குள்ளான குர்தாஸ்பூர் மாவட்டத்துக்குச் சென்று, அங்குள்ள பாதிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் விவசாயிகளை பிரதமர் சந்திக்கிறார். மக்களிடம் நேரடியாக நிலைமைகளை அறிந்து, தேவையான நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசிக்க உள்ளார்.
மேலும், சட்லஜ், பியாஸ், காகர் போன்ற முக்கிய நதிகளின் கரைகள் சட்டவிரோத சுரங்கம் மற்றும் பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக பலவீனமடைந்துள்ள நிலையில், அவற்றை வலுப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை பிரதமர் வலியுறுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்துக்கு மத்திய அரசு சார்பில் சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சாப் பா.ஜ.க. தனது எக்ஸ் தளத்தில், “பிரதமர் மோடி வருகிற 9ஆம் தேதி குர்தாஸ்பூர் வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை நேரடியாக சந்தித்து, அவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார். இந்த வருகை மத்திய அரசு பஞ்சாப் மக்களுடன் எப்போதும் நிற்கும் என்பதை நிரூபிக்கிறது,” என பதிவிட்டுள்ளது.
குறிப்பாக, பஞ்சாபில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் இதுவரை 43 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் 23 மாவட்டங்களில் 1,900-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 1.71 லட்சம் ஹெக்டேர் விவசாயப் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
English Summary
Prime Minister Modi to visit flood hit areas in Punjab on 9th