சிறிய டப்பாவில் ரூ.8 கோடி விஷம்…! - சூரத்தில் போலீஸ் அதிரடி வேட்டை!
Poison worth 8 crore small box Police conduct surprise raid Surat
குஜராத் மாநிலம் சூரத் நகரில், சிறப்பு போலீஸ் குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான நடத்தை கொண்ட ஒரு நபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த சிறிய டப்பா ஒன்று, பின்னர் நாட்டையே உலுக்கிய ரகசிய குற்றச் சங்கிலியின் தொடக்கமாக மாறியது.
அந்த டப்பாவை திறந்து பார்த்த போலீசார், அதில் இருந்தது சாதாரண திரவம் அல்ல; அது அரிதும், கொடியதுமான பாம்பு விஷம் என்பதும், சர்வதேச ரகசிய சந்தையில் பல கோடிகளில் விற்பனை ஆகும் உயர்மதிப்புள்ள பொருள் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 6.5 மில்லி லிட்டர் பாம்பு விஷம் கைப்பற்றப்பட்டது.

இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.5.85 கோடி என அதிகாரிகள் மதிப்பிட்டனர்.பாம்பு விஷத்தை கடத்தி வந்த நபரின் பெயர் சோனி என்பதும், அவர் அதை மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ரகசிய வர்த்தக கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி வியூகம் வகுத்தனர்.சோனியை வாடிக்கையாளர்களிடம் பேசவைத்து, பாம்பு விஷம் வாங்க வருவோருக்கு வலைவிரித்த போலீசார், அதன்படி ரூ.8 கோடிக்கு வாங்க சம்மதம் தெரிவித்து வந்த கும்பலை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்தனர்.
திட்டமிட்டபடி, அங்கு வந்த மேலும் ஆறு பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.மேலும்,கைதானவர்களில் நால்வர் மத்திய பிரதேச மாநிலத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற இருவர் சூரத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த கும்பல், பாம்பு விஷத்தை பல மாநிலங்களுக்கு கடத்தி ரகசியமாக விற்பனை செய்து வந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், “குஜராத்தில் இத்தனை அதிக மதிப்புள்ள பாம்பு விஷம் பிடிபடுவது இதுவே முதல் முறை” என்று தெரிவித்தனர்.
இந்த கொடிய பாம்பு விஷம்,விஷமுறிவு மருந்துகள் தயாரிப்பு,ரகசிய மருத்துவ பயன்பாடுகள்,மற்றும் சில இடங்களில் நடைபெறும் வெறித்தனமான போதை பார்ட்டிகள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம், நாட்டில் நடைபெறும் அரிதான விஷம் கடத்தல் வலையமைப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததுடன், போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பெரும் குற்றச் சங்கிலி முறியடிக்கப்பட்டுள்ளதாக பாராட்டுப் பெறுகிறது.
English Summary
Poison worth 8 crore small box Police conduct surprise raid Surat