பிளாஸ்டி கழிவு கொடுத்தால் உணவு... “குப்பை கஃபே” விற்கு பிரதமர் மோடி பாராட்டு!
pm modi wish waste cafe
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் “குப்பை கஃபே” எனும் புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்படும். இந்த முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தனது “மன் கி பாத்” உரையில் பாராட்டியுள்ளார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி வழியாக மக்களுடன் உரையாடும் பிரதமர், தனது 127வது நிகழ்ச்சியில் இதை எடுத்துரைத்தார். சூரியனுக்கு மரியாதை செலுத்தும் சத் பூஜை திருவிழா இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையையும், இயற்கையுடன் இணைந்த சமூக ஒற்றுமையையும் பிரதிபலிப்பதாகவும் கூறினார்.
அதே நேரத்தில், “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் ராணுவ நடவடிக்கையில் இந்திய படைகள் பெற்ற வெற்றியைப் பெருமையாகக் குறிப்பிட்டார். முன்பு மாவோயிஸ்ட் தாக்குதல்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் இப்போது அமைதியின் ஒளி பரவி வருவதாக தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் தொடங்கிய “குப்பை கஃபே” முயற்சி குறித்து அவர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. அம்பிகாபூர் நகராட்சியால் நடத்தப்படும் அந்த கஃபேவில், ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவை ஒப்படைத்தால் மதிய உணவும், அரை கிலோ கொடுத்தால் காலை உணவும் வழங்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், பிளாஸ்டிக் மாசைக் குறைப்பதற்கும் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது என அவர் பாராட்டினார்.
மேலும், குஜராத் மாநில வனத்துறையின் தோலேரா கடற்கரை சதுப்புநில விரிவாக்கத் திட்டத்தையும் அவர் பாராட்டினார். இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் மூன்றரை ஆயிரம் ஹெக்டேரில் சதுப்புநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.