'கோஹினூர் வைரம் நமது நாட்டுக்கு சொந்தமானது; அதனை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்': பவன் கல்யாண்..!
Pawan Kalyan says Kohinoor diamond belongs to our country and should be brought back to India
இங்கிலாந்தில் இருக்கும் கோஹினூர் வைரம் நமது நாட்டுக்கு சொந்தமானது. அதனை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
இங்கிலாந்து ராணி கிரீடத்தில் அலங்கரித்த கோஹினூர் வைரம் 1849-ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் தான் இருந்தது. அதன் பின்னர் பிரிட்டிஷ் படைகள் இந்தியாவை கைப்பற்றிய உடன் அவை இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 1850-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியிடம் வழங்கப்பட்டது.
105 காரட் மதிப்பு கொண்ட இந்த வைரம் தற்போது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தை மீட்க வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இது குறித்து கூறியதாவது: கோஹினூர் வைரத்தை பற்றி நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு பேசுவது. அந்த வைரம் எங்கிருந்து வந்தது. இந்த வைரம் கல்லாக, கிருஷ்ணா நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
பெறுமதி மிக்க கருவூலம், பிறகு முகலாயர்கள் கைகளுக்கும், பிறகு ஆங்கிலேயர் கைக்கும் சென்று இங்கிலாந்தில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அது நமது நாட்டுக்கு சொந்தமானது என தனிப்பட்ட முறையில் நான் கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரதத்துக்கு சொந்தமான கோஹினூர் வைரம் அது நமது மனதிலும், ஆன்மாவிலும் நிறைந்துள்ளதால் அதனை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், இந்தியா எந்த நாட்டையும் தாக்கியது கிடையாது என்றும், யார் மீதும் அத்துமீறியது கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒவ்வொருவரும் இந்தியாவை எடுத்துக்கொள்ள நினைத்து, தாக்குதல்கள் மற்றும் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தனர் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், முகலாயர்களை கொண்டாடும் புத்தகங்கள், அவர்கள் நமது நாட்டு மன்னர்கள் மீது கையாண்ட அடக்குமுறைகளை வெளிக்கொண்டு வர மறுத்துவிட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நமது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புத்தகத்தை படித்தால், முகலாயர்களை சிறந்தவர்கள் என எத்தனை நாட்களுக்கு படிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், அவர்களால் நமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன..? அவர்களால் ஏற்பட்ட அடக்குமுறைகள் பற்றியும், அதனால் அடைந்த துன்பம் பற்றியும் நாம் படித்தது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் கூறுகையில், அக்பர், அவுரங்கசீப் சிறந்தவர்கள் எனக் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்தது பற்றி கூறுவது கிடையாது என்று தெரிவித்த அவர், அவர்களை எதிர்த்து நமது நாட்டு மன்னர்கள் தைரியத்துடன் போராடியது குறித்து சொல்லப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
English Summary
Pawan Kalyan says Kohinoor diamond belongs to our country and should be brought back to India