இந்தியாவில் நாளிதழ் விற்பனை உயர்வு – ஏபிசி அறிக்கை வெளியீடு!
Newspaper sales increase in India ABC report released
நமது நாட்டில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் ஆகியவற்றின் விற்பனை மற்றும் விநியோகத்தை தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு (Audit Bureau of Circulations – ABC) செய்து வருகிறது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை குறித்த தணிக்கை அறிக்கையின் படி, நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை நாடு முழுவதும் மொத்தம் 2 கோடி 89 லட்சத்து 41 ஆயிரத்து 876 பிரதிகள் விற்பனையாகியிருந்தன. ஆனால் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி – ஜூன்) 2 கோடி 97 லட்சத்து 44 ஆயிரத்து 148 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் முந்தைய 6 மாத காலத்தோடு ஒப்பிடுகையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 272 பிரதிகள் அதிகம் விற்பனையாகியிருப்பது தெரியவந்துள்ளது.இதுவே கடந்தாண்டின் இரண்டாம் பாதியை விட 2.77 சதவீதம் அதிகரிப்பு எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஏபிசி பொதுச்செயலாளர் ஆதில் கராத் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,“நாளிதழ் விற்பனை உயர்வது வாசகர்கள் இன்னும் நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட, ஆழமான தகவல்களுக்கு செய்தித்தாள்களை நம்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. அச்சு ஊடகத்தின் வலிமையான வளர்ச்சியை இந்த உயர்வு பிரதிபலிக்கிறது. நாளிதழ்களின் விற்பனை எழுச்சி, செய்தி பயன்பாடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கும் வலுவான தளமாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை, டிஜிட்டல் ஊடக வளர்ச்சியுடனும், அச்சு ஊடகத்தின் தாக்கம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.
English Summary
Newspaper sales increase in India ABC report released