நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு விசாரணை: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!
National Herald money laundering case trial Court notice to Sonia Rahul
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுலுக்கு டில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்ஸ்' நிறுவனம் வாங்கியது.
யங் இந்தியன்ஸ் நிறுவனத்தில், முக்கிய பங்குதாரர்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் உள்ளனர். இதைத்தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன், ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, டில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை, 2021-இல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், அக்கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, சுமன்துபே உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

குறித்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அத்துடன், நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்கு, எந்த வழக்கையும் விசாரிக்க உரிமை அவசியம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதோடு, வழக்கு விசாரணையை மே 08-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
National Herald money laundering case trial Court notice to Sonia Rahul