கணவனை உள்ளே தள்ள முன்னாள் காதலனுடன் மாஸ்டர் பிளான்...! - பார்சலில் வந்த விபரீதப் பொருளால் காஷ்மீரில் அரங்கேறிய அதிரடி திருப்பம்...!
Master plan with ex boyfriend to push husband in Action packed twist Kashmir due strange item parcel
காஷ்மீரில் கணவரை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைக்க மனைவி தீட்டிய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. கோழிப்பண்ணைக்கு பார்சல் மூலம் போதைப்பொருளை அனுப்பி, கணவரை சிக்கவைக்க முயன்றதாக மனைவி மற்றும் அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.கந்தர்பால் மாவட்டம் சபாபோரா பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்கு விலை உயர்ந்த போதைப்பொருட்கள் பார்சல் மூலம் அனுப்பப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவலர்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்தப் பண்ணைக்குச் சென்று கண்காணித்தனர்.தகவலில் குறிப்பிடப்பட்டபடியே அங்கு ஒரு பார்சல் வந்து சேர்ந்தது. அதனை உரிமையாளர் திறப்பதற்கு முன்பாகவே அதிகாரிகள் கைப்பற்றி சோதனை செய்தனர். பார்சலுக்குள் கொக்கைன், சராஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களும், போதை மாத்திரைகளும் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து கோழிப்பண்ணை உரிமையாளரை காவலர்கள் பிடித்து விசாரித்தனர்.
ஆனால், பார்சலில் போதைப்பொருள் இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறியுள்ளார்.கோழிப்பண்ணை உரிமையாளர் மீது இதற்கு முன்பு எந்த குற்ற வழக்கும் இல்லாததால், இந்த சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காவலர்களுக்கு ஏற்பட்டது.இதையடுத்து அவரது கைப்பேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது, சவுதி அரேபியாவில் இருந்து அவருக்கு அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில், குறைந்த விலையில் கோழித்தீவனம் வழங்குவதாகக் கூறி ஒருவர் தன்னை தொடர்பு கொண்டதாகவும், அவர் கேட்டதால் தனது முகவரியை அனுப்பியதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.மேலும், தனது திருமணத்துக்கு முன்பும் சவுதி அரேபிய எண்ணில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு, திருமணத்தை நிறுத்துமாறு தன்னை எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த தகவல் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து கோழிப்பண்ணை உரிமையாளரின் மனைவியிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, திருமணத்துக்கு முன்பு அந்த பெண் தாரிக் அகமது என்பவரை காதலித்து வந்ததும், பெற்றோரின் வற்புறுத்தலால் கோழிப்பண்ணை உரிமையாளரை திருமணம் செய்ததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகும் முன்னாள் காதலனுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பிவிட்டு, முன்னாள் காதலனுடன் சேர்ந்து வாழ அந்த பெண் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இதன்படி, தாரிக் அகமது போதைப்பொருட்களை வாங்கி, தனது நண்பர் அரீப்பின் உதவியுடன் அவற்றை கோழிப்பண்ணைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
கோழித்தீவனம் என்ற பெயரில் பார்சலை அனுப்பி, பின்னர் காவலர்களுக்கு தகவல் அளித்து கணவரை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைக்க இருவரும் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.பார்சல் அனுப்பப்பட்ட பின்னர் அரீப் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றதாகவும், அவரது கைப்பேசி எண்ணிலிருந்தே கோழிப்பண்ணை உரிமையாளருக்கு அழைப்பு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி தெரிவிக்கையில், கோழிப்பண்ணை உரிமையாளரை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் போல சித்தரித்து சிக்கவைக்க திட்டமிட்டு சதி நடைபெற்றதாக தெரிவித்தார். தீவிர விசாரணையின் மூலம் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து கோழிப்பண்ணை உரிமையாளரின் மனைவி மற்றும் அவரது முன்னாள் காதலன் தாரிக் அகமது ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும், போதைப்பொருளை பார்சல் மூலம் அனுப்பியதாக கூறப்படும் அரீப்பை பிடிக்க தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Master plan with ex boyfriend to push husband in Action packed twist Kashmir due strange item parcel