பிரபல இயக்குநர் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு; லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த நபர் கைது; விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Man Who Opened Fire at Popular Director Rohit Shettys Residence Arrested
மும்பையில் பாலிவுட் திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய நபர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டியின் வீடு, மும்பை ஜூகு பகுதியில் உள்ள 10 மாடி கட்டிடத்தில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி இரவு அவரது வீட்டின் மீது மர்மநபர்கள் 05 முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இதில் குண்டு அவரது வீட்டு முதல் மாடி சுவர், பால்கனி கண்ணாடியை துளைத்தது.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து சம்பவம் நடந்த அன்றே தாக்குதலில் தொடர்புடைய 05 பேரை போலீசார் புனேயில் கைது செய்தனர். ஆனாலும், முக்கிய குற்றவாளி தலைமறைவான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 08 மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் சாதுவாலி சோதனைச் சாவடியில் ஒரு மோதல் சம்பவம் அரங்கேறியது.
அந்த சம்பவத்தின் போது, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் பஞ்சாபிலிருந்து பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில், ராஜஸ்தானின் சாதுவாலி சோதனைச் சாவடி வழியாக வந்துகொண்டிருந்தார். வாகனத்தில் பதிவெண் இல்லை என்பதை அறிந்ததும் போலீசார் அந்த வண்டியை மடக்கியுள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆகாஷ் திடீரென துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் மீது மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ந்து போன போலீசார் உடனடியாக சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஆகாஷின் காலில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்துள்ளார். அவரை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், மும்பையில் திரைப்பட இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய நபர் எனத் தெரியவந்துள்ளது.
32 வயதான ஆகாஷ் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாரன்ஸ் கும்பலின் முக்கிய கூட்டாளியான ரவுடி அர்ஸூ பிஷ்னோயின் வழிகாட்டுதலின் கீழ் ஆகாஷ் செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் அர்ஸூ பிஷ்னோய் சமூக ஊடகங்கள் வழியாக கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், ரோஹித் ஷெட்டியின் மும்பை இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான ஒப்பந்தத்தை ஆகாஷ், அவரது கூட்டாளியான ஷிவா குர்ஜாருடன் சேர்ந்து ஏற்றுக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தப் பணியை அர்ஸூ பிஷ்னோய் வழங்கியதாகவும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இணையதளங்கள் மூலமாக தகவல்களை பறிமாறிக்கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
போலீசாரின் விசாரணையின் படி, ஆகாஷ் ஒரு தொழில்முறை துப்பாக்கிச் சுடும் வீரர் என்றும், முக்கியமாக இடங்களை வேவு பார்ப்பதிலும், இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவதிலும் ஈடுபட்டு வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் வசித்து வந்த அவர் மீது உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹனுமன்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அடுத்ததாக, ஆகாஷின் கூட்டாளியான சிவா குர்ஜார், மார்ச் 23 அன்று பிடியாணையின் பேரில் கைது செய்யப்பட்டு ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர்களுக்கு சிறையில் உள்ள ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் இலக்குகளை வழங்கியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
English Summary
Man Who Opened Fire at Popular Director Rohit Shettys Residence Arrested