''மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும்; லவ் ஜிஹாத், நில ஜிஹாத்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்''; முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு..!
Chief Minister Suvendu Adhikari announces that a law against forced conversion will be introduced in West Bengal
மேற்கு வங்கத்தில் இனிவரும் காலங்களில் லவ் ஜிஹாத், நில ஜிஹாத் ஆகியவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும், அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது;
மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும், அதற்கென ஒரு குறிப்பிட்ட நடைமுறை இருக்கிறது. அதைப் பின்பற்றி சட்டம் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தச் சட்டம், குஜராத், அசாம் மாநிலங்களில் உள்ள பொது சிவில் சட்டத்தைப் போல இருக்கும் எனவும், நில ஜிஹாத், லவ் ஜிஹாத், கட்டாய மதமாற்றத் தடை ஆகியவற்றுக்காகவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார்.

அதாவது, முந்தைய அரசின் நோக்கங்கள் ஓட்டு வங்கி அரசியல், ஊழல், உறவினர்களுக்குச் சலுகை காட்டுதல் என்பதாக இருந்ததாகவும், தேசியவாதம், தேசபக்தி போன்றவை அவர்களின் செயல்திட்டத்தில் இருக்கவில்லை என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
ஆனால், இப்போது இங்கு தேசியவாத அரசு ஆட்சிக்கு வந்துள்ளதால், அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படும் வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் சுவேந்து அதிகாரியின் இந்த அறிவிப்புக்கு திரிணமூல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''பன்முகத்தன்மையை மதிப்பதோடு சமத்துவத்தையும் இணைத்துச் செயல்படுத்துவதில்தான் இந்தியாவின் வலிமை உள்ளது. சீர்திருத்தங்களை வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது. உரையாடல், நம்பிக்கை, அரசியலமைப்பு விழுமியங்கள் மூலம் அவை கட்டமைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவம், கண்ணியம், நீதி ஆகிய அரசியலமைப்பு லட்சியங்கள் கிடைக்கச் செய்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். எந்தவொரு தனிநபர் சட்டமும் பாகுபாட்டைத் தொடரச் செய்வதாக இருக்கக்கூடாது.
பாஜகவின் நோக்கம், செயல்திட்டம், அரசியல் ஆகியவை குறித்தே எங்கள் கவலை உள்ளது. பாஜக இந்த லட்சியங்களை உண்மையாகவே முன்னெடுக்கிறதா அல்லது சமூகப் பிளவுகளை ஆழப்படுத்த பொது சிவில் சட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறதா என்பதுதான் கேள்வி.
அரசியல் ஆதாயத்துக்காக உணர்வுப்பூர்வமான விவகாரங்களைப் பயன்படுத்திக்கொள்வதில் பாஜக பெயர் பெற்றது. தனது அரசியல் செயல்திட்டம் குறித்து பாஜக எந்த உறுதியும் அளிக்கவில்லை. பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் ஆதிவாசி சமூகங்கள் போன்ற அனைத்துத் தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளது.
English Summary
Chief Minister Suvendu Adhikari announces that a law against forced conversion will be introduced in West Bengal