விண்ணைத் தொடப்போகும் மேக் இன் இந்தியா...! ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்தது ரிலையன்ஸ்...!
Make in India is about to reach sky Reliance joins hands Rolls Royce
இந்தியாவின் எதிர்கால வான்வெளி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரேடார்களின் கண்காணிப்பில் சிக்காத ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் கொண்ட போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதிய கூட்டணியை அறிவித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, போர் விமானங்களுக்கான அதிநவீன என்ஜின்களை வடிவமைத்து தயாரிக்கும் பணிகளில் இரு நிறுவனங்களும் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் எதிர்கால பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கிய இடம்பிடிக்க உள்ள 5-வது தலைமுறை போர் விமானத்தின் முன்மாதிரி வடிவம் 2028-ம் ஆண்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அடித்தளப் பணிகளுக்கு இந்தியா ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் தேவைகளை கருத்தில் கொண்டு, உள்நாட்டிலேயே அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்திய நிறுவனங்களுக்கும் இந்தத் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இரட்டை என்ஜின் கொண்ட ‘ஸ்டெல்த்’ போர் விமானங்களுக்கான என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் அதிநவீன உற்பத்தி வளாகத்தை அமைப்பது குறித்து ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
இந்த கூட்டணி குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் அம்பானி கூறுகையில், ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட உந்துவிசை தொழில்நுட்பத்தையும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப அறிவு, உற்பத்தித் திறன் மற்றும் செயல்பாட்டு வலிமையையும் ஒருங்கிணைத்து, இந்தியாவுக்கான அதிநவீன உள்நாட்டு போர் விமானத்தை உருவாக்குவதே முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் - ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் போர் விமான என்ஜின் தயாரிப்பு துறையில் போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது. பிரான்சைச் சேர்ந்த சப்ரான் நிறுவனமும் ஏற்கனவே இந்திய அரசின் பாதுகாப்புத்துறை நிறுவனத்துடன் இணைந்து, அடுத்த தலைமுறை போர் விமானங்களுக்கு அதிக உந்துசக்தி வழங்கக்கூடிய என்ஜின்களை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 4.5-வது தலைமுறை தேஜஸ் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. எனினும், என்ஜின் விநியோகத்தில் ஏற்பட்ட தொடர் சிக்கல்கள் காரணமாக உற்பத்திப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இத்தகைய சூழலில், ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் மேற்கொள்ளும் புதிய கூட்டணி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருப்பதால், இந்த கூட்டணி இந்தியாவின் உள்நாட்டு போர் விமான உற்பத்திக்கு புதிய வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Make in India is about to reach sky Reliance joins hands Rolls Royce