கர்நாடகா எல்லைப் பகுதியில் அதிரடிச் சம்பவம்... தமிழக விவசாயிகள் 3 பேர் சுட்டுக் கொலை....! - கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்...!
Shocking incident Karnataka border area 3 Tamil Nadu farmers shot dead Political leaders outraged
கர்நாடக சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 3 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ், ஜான் மற்றும் குமார் ஆகிய 3 பேரும் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், காணாமல் போன மாடுகளைத் தேடி வனப்பகுதிக்குள் சென்ற அவர்கள், கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
3 பேரும் வனப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றதாக வனத்துறையினர் தரப்பில் கூறப்படுவதாகவும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை திசைதிருப்பும் வகையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.எந்த காரணத்தைக் கூறியும் 3 விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறையினரை உடனடியாக பணியிலிருந்து நீக்கி, கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.3 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து, கர்நாடக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும், சம்பவத்தின் முழுமையான பின்னணியை வெளிக்கொண்டு வர மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 3 விவசாயிகளின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசு உரிய இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசிடம் தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
English Summary
Shocking incident Karnataka border area 3 Tamil Nadu farmers shot dead Political leaders outraged