கொல்கத்தாவில் மெஸ்ஸி ரசிகர்களின் வெறியாட்டம் - மைதானத்தில் லேசான தடியடி!
Lionel Messi kolkatta
அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு இன்று (டிசம்பர் 13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
70 அடி சிலை திறப்பு:
கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில், ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் நிறுவப்பட்ட 70 அடி உயர மெஸ்ஸியின் உருவச் சிலையை, அவர் காணொலி மூலம் திறந்து வைத்தார். கையில் உலகக் கோப்பையை ஏந்தியபடி வடிவமைக்கப்பட்டிருந்த இந்தச் சிலை திறப்பின்போது, ரசிகர்கள் இந்தியா மற்றும் அர்ஜென்டினா கொடிகளை உயர்த்திப் பிடித்து உற்சாகம் தெரிவித்தனர்.
ரசிகர்களின் ஏமாற்றம்:
மெஸ்ஸியின் வருகையையொட்டி, 78 ஆயிரம் இருக்கைகள் கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியைச் சுற்றி ஏராளமான அதிகாரிகள் இருந்ததால், ரசிகர்களால் அவரைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. மேலும், அவர் உடனடியாகக் கிளம்பிச் சென்றதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த ரசிகர்கள், மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசியெறிந்தும், மேடையை அடித்து நொறுக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுப்படுத்த, ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.