சபரிமலை கோவிலில் தங்கத் தகடுகள் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது!
Kerala Sabarimala temple Gold Missing case
சபரிமலை கோவிலில் துவாரபாலகர்கள் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகள் புதுப்பிப்பு பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டபோது, அதில் 4.6 கிலோ தங்கம் மாயமானதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
தங்கமுலாம் பூசும் பணியை ஏற்றுக்கொண்ட பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. தங்கத் தகடு மாயம் தொடர்பான குற்றச்சாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், திருவாபரண பெட்டியின் முன்னாள் ஆணையர் பைஜு உள்ளிட்ட ஒன்பது பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தங்கத் தகடு மாயம் வழக்கில் முதல் குற்றவாளியாக பெயர் சேர்க்கப்பட்டுள்ளார். சிறப்பு புலனாய்வு குழு அவரை அக்டோபர் 17-ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, கோவில் நிர்வாக அதிகாரி முராரி பாபுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
English Summary
Kerala Sabarimala temple Gold Missing case