பாலியல் பலாத்கார புகார்; 'ராப்' பாடகர் வேடனுக்கு நிபந்தைகளுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ள கேரள உயர்நீதிமன்றம்..!
Kerala High Court grants anticipatory bail to rapper Vedan in rape case
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பிரபல ராப் இசை பாடகர் ஹிரண் தாஸ் முரளி என்ற வேடன். இவர் மீது கொச்சியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் சமீபத்தில் பலாத்கார புகார் கொடுத்தார். இது குறித்து, திருக்காக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வேடன், கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், முன்ஜாமீன் மனுவில் தீர்ப்பு வழங்கும் வரை வேடனை கைது செய்ய தடை விதித்திருந்தது.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியை சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஒருவரும், ராப் பாடகர் வேடன் மீது, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இமெயில் மூலம் பலாத்கார புகாரை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த புகார் குறித்து, கொச்சி போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து ராப் இசை பாடகர் ஹிரண் தாஸ் முரளி என்ற வேடன் மீது இபிகோ 354, 354 ஏ(1), 294 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பெண் டாக்டர் அளித்த புகாரின்பேரில், வேடனுக்கு இன்று நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வரும் செப்டம்பர் 09-ஆம் தேதி வேடன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், கைது செய்தால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி பெச்சு குரியன் உத்தரவிட்ட்டுள்ளார்.
English Summary
Kerala High Court grants anticipatory bail to rapper Vedan in rape case