11 குழந்தைகள் உயிரிழப்பு: காஞ்சிபுரம் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து விற்பனைக்கு தடையை தொடர்ந்து நோட்டீஸ்!
kanjipuram goldrif issue
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 11 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாகக் கூறப்படும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுமா என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சிந்த்வாரா மாவட்டத்தில், ஒன்று முதல் ஏழு வயது வரை உள்ள குழந்தைகள் திடீரென சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தனர். விசாரணையில், அவர்கள் ‘கோல்ட்ரிப்’ மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.’ என்ற இருமல் மருந்துகளை உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்த குழந்தைகளின் உடலில் ‘டை எத்திலீன் கிளைசால்’ என்ற ரசாயனம் இருந்தது தெரியவந்தது. இது பொதுவாக பெயிண்ட், மை போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனமாகும்.
இதையடுத்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்துறை விசாரணைக் குழுவை அமைத்துள்ளன. மத்தியப்பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 13 பேட்ச் மருந்துகளை சோதனைக்கு உட்படுத்தினர். தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, 5 மருந்துகளை சேகரித்தனர். இதில் ‘கோல்ட்ரிப்’ மருந்திலேயே ஆபத்தான ரசாயனம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனால், அந்த மருந்தின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தான், ஒடிஸா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், ‘நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.’ மருந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தைகள் உயிரிழப்பைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பரிந்துரைக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.