ஜார்க்கண்ட் அமைச்சர் தீபிகா பாண்டே சிங் மகள் உட்பட 4 பள்ளி மாணவர்கள் சாலை விபத்தில் பலி: முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல்!
Jharkhand Minister Daughter Among 4 School Students Killed in Tragic Car-Truck Collision Near Jamshedpur
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில், அம்மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகள் உட்பட 12-ஆம் வகுப்பு பயிலும் நான்கு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தது எப்படி?
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெத்பூர் அருகே வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் பயணித்த மாணவர்கள் அதிவேகமாக வந்தபோது, புதன்கிழமை இரவு 10 மணி முதல் பழுதடைந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக லாரியின் பின்புறம் கார் கட்டுப்பாட்டை இழந்து பலமாக மோதியுள்ளது. இதில் காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
உயிரிழந்தவர்கள் விவரம்:
இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் அமைச்சரின் மகள் த்ரிஷா சிங், சர்தக் அகர்வால், நமன் குப்தா மற்றும் வன்ஷிகா கண்டேல்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் பள்ளிப் பருவ நண்பர்கள் ஆவர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல்:
இச்சோகச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், "தன் குழந்தையை இழக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. எந்தவொரு பெற்றோருக்கும் இது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த மிகவும் கடினமான தருணத்தில், சகோதரி தீபிகா பாண்டே சிங் மற்றும் துயருற்ற குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
English Summary
Jharkhand Minister Daughter Among 4 School Students Killed in Tragic Car-Truck Collision Near Jamshedpur