பீகார் தேர்தலில் டெப்பாசிட் இழந்த ஜன் சுராஜ் கட்சி; பொதுமக்களிடம் குறைந்தது ரூ.1000 நன்கொடை கேட்கும் பிரஷாந்த் கிஷோர்..!
Jan Suraj Party leader Prashant Kishor is asking the public for a donation of at least Rs1000
சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அக்கூட்டணி சார்பில் பீகார் மாநில முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் நேற்று பதவியேற்றுள்ளார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த இரண்டு துணை முதல்வர்களும் பதவியேற்றுள்ளனர். இது தவிர கூட்டணியில் இடம்பெற்றுள்ள பலரும் நேற்று அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இந்த நிலையில், பிரபல தேர்தல் வியூகவாதியும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் டெப்பாசிட் இழந்து படுதோல்வியைச் சந்தித்தார். அவர் கட்சியைச் சேர்ந்த இருவர் மட்டுமே டெபாசிட் பெற்றனர். அவருடைய தோல்வி, பீகார் தேர்தலில் மட்டுமல்ல, நாடு முழுவதும்பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ஜன் சுராஜு கட்சிக்கு ரூ.1000 நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களை பிரசாந்த் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்;

'பீகார் சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்தபடி செயல்படத் தவறியதை அடுத்து, கட்சி தோல்வியடைந்த போதிலும், தனது கட்சியின் முன்முயற்சிகளின் கீழ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். பீகார் மக்களுக்காக தாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தான் சம்பாதிக்கும் தொகையில் குறைந்தது 90 சதவிகிதத்தை ஜன் சுராஜ் கட்சிக்கு நன்கொடையாக வழங்குவேன்.
என் குடும்பத்திற்கு டெல்லியில் ஒரு வீட்டைத் தவிர, கடந்த 20 ஆண்டுகளில் சம்பாதித்த எனது சொத்துக்கள் அனைத்தையும் இந்த முயற்சிக்கு நன்கொடையாக வழங்குகிறேன். பணப் பற்றாக்குறை காரணமாக இந்த முயற்சி நின்றுவிடாது. பீகார் மக்கள் ஜன் சுராஜுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 நன்கொடை அளிக்க வேண்டும்.' எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.
English Summary
Jan Suraj Party leader Prashant Kishor is asking the public for a donation of at least Rs1000