காவலர்களிடம் இருந்து தப்பிய கைதி...! ஆதார் அட்டைக்காக மீண்டும் அவர்களிடமே சென்ற சுவாரசிய சம்பவம்...!
interesting incident where prisoner escaped from guards He went back them Aadhaar card
கேரள மாநிலம் கொச்சியில் சிறையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி ஒருவர், தன்னை ஏற்கனவே கைது செய்த காவல் நிலையத்துக்கே மீண்டும் சென்று தனது ஆதார் அட்டையை கேட்ட சம்பவம் பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய பின்னரும் வேறு எங்கும் செல்லாமல், தனது ஆதார் அட்டையை பெறுவதற்காக காவல் நிலையத்தைத் தேடி வந்தது காவலர்களையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அசாம் மாநிலம் தேமாஜி பகுதியைச் சேர்ந்த மதுர்ஜ்யா சோனாவால், 28, கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடத்தலா பகுதியில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களின் செல்போன்களை திருடியதாக கடந்த 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் துணைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த நாள் மாலை சுமார் 4 மணியளவில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வு நேரத்தை சோனாவால் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சிறையின் சமையலறை வழியாகச் சென்று சுற்றுச்சுவரில் ஏறி அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.கைதிகளை மீண்டும் அறைகளுக்குள் அடைப்பதற்கு முன்பு வழக்கமான எண்ணிக்கை நடத்தப்பட்டபோதுதான் சோனாவால் காணாமல் போனது சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அருகிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தப்பிய கைதியை பிடிக்க தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.சிறையில் இருந்து தப்பிய சோனாவால், தலைமறைவாக எங்காவது செல்வதற்குப் பதிலாக தன்னை கைது செய்த அதே காவல் நிலையத்துக்கே சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் தனது ஆதார் அட்டையை பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.தன்னை ஏற்கனவே கைது செய்த காவலர்கள் அப்போது பணியில் இருக்க மாட்டார்கள் என்றும், தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர் நினைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் இருந்த காவலர்களாலும் அவரை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.அந்த நேரத்தில், சிறையில் இருந்து தப்பிய கைதியை பிடிப்பதற்காக வெளியிடப்பட்ட எச்சரிக்கை தகவலை பார்த்திருந்த மற்றொரு காவலர், சோனாவாலை அடையாளம் கண்டுகொண்டார்.
தனது அடையாளம் தெரிந்துவிட்டதை உணர்ந்த சோனாவால் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து மீண்டும் தப்பியோடியுள்ளார். இதனால் காவல் நிலையத்துக்குள் இருந்த காவலர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து தப்பியோடிய சோனாவாலை பிடிப்பதற்காக காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் இருந்து தப்பிய பின்னரும், தன்னை கைது செய்த காவல் நிலையத்துக்கே ஆதார் அட்டைக்காக திரும்பி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.தப்பிச் சென்ற கைதி மீண்டும் அதே காவல் நிலையத்துக்கு வந்து சிக்கியதும், அடையாளம் தெரிந்ததும் அங்கிருந்து மீண்டும் தப்பியோடியதும் இந்த சம்பவத்தை மேலும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
English Summary
interesting incident where prisoner escaped from guards He went back them Aadhaar card