கூகுள் மேப் மூலம் கோயில்களை குறிவைத்து கொள்ளை; கையும் களவுமாக சிக்கிய ஆசாமிகள்..!
Individuals who targeted temples for robbery using Google Maps arrested in Gujarat
குஜராத் கட்ச் மாவட்டத்தில் மோதி ஹமீர்பார் கிராமத்தில் வெவ்வேறு இடங்களில் கோடியார் மற்றும் ராமாபீர் கோயில்கள் உள்ளன. இங்கு விசேஷ நாட்களில் இந்த கோயில்களுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் சென்று வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வந்த இருவர், அடுத்தடுத்து இந்த கோயில்களில் கைவரிசை காட்டி, அங்கிருந்து, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், பஞ்சபாய் கோலி மற்றும் ஜாவேத் காஞ்சி ஆகிய இருவரும் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர். அதில், இருவரும் அண்மைக் காலமாக கோயில்களை குறிவைத்து திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில் கூகுள் மேப் மூலம் ஆள் நடமாட்டம் இல்லாத கோயில்களை இவர்கள் நோட்டமிட்டது தெரிய வந்தது.
குறித்த இருவரும் நள்ளிரவில் நடந்தே அந்தப் பகுதிக்கு சென்று கைவரிசை காட்டியுள்ளனர். அதாவது தேங்காய் உரிக்கும் கருவி மூலம் பூட்டுகளை உடைத்து கோயில் நகைகளை திருடி வந்துள்ளனர். திருட்டு நகைகளை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் ஹமீர்பார் கோயில்களில் திருடிய நகைகளை விற்பனை செய்ய சென்றபோது இருவரும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். அத்துடன், அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், 02 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்கள் கட்ச் மாவட்டத்தில் கூகுள் மேப் மூலம் கோயில் இருக்கும் இடத்தை அறிந்து, கைவரிசை காட்டி வந்துள்ளமை அந்த பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Individuals who targeted temples for robbery using Google Maps arrested in Gujarat