இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் இறுதிக் கட்டத்தில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து..?
India and US trade deal in final stages of signing soon
இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்பகுதியை நிறைவேற்ற இரு நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக விரைவில் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் இதுவரை ஐந்து கட்ட பேச்சுகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்ததால் பேச்சுவார்த்தை தடைபட்டது. ஆலோசனைக்கு பின்னர் அமெரிக்க குழுவினர் டில்லி வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் போது இரு தரப்பும் பலன்பெறும் வகையில் விரைவில் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை 191 பில்லியன் டாலரில் இருந்து 500 பில்லியன் டாலர் ஆக மாற்றுவது என ஒப்புக் கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் வர்த்தக பேச்சுவார்த்தையை நடத்த கடந்த மாதம் மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான குழு அமெரிக்கா சென்று வந்தது. இந்த பயணத்தின் போது, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் உள்ளிட்ட அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பியுஷ் கோயல் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்புகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் போது வர்த்தக விவாதங்களை தொடரவும், இரு தரப்புக்கும் சாதகமான ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் அடங்கிய குழு இந்த வாரம் அமெரிக்கா சென்றது.

இந்நிலையில் 'இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், பெரும்பாலான பிரச்சினைகளில் இரு நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
ஒப்பந்தம் ஏற்படுவதற்கு அருகில் வந்துவிட்டோம். தீர்வு காண்பதற்கு தற்போது அதிக பிரச்னைகள் ஏதும் இல்லை. ஒப்பந்தம் போடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எந்த விஷயமும் தடையாக இல்லை' என்று மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
English Summary
India and US trade deal in final stages of signing soon