அசாத்திய சாதனை...! பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை..! - இந்திய மருத்துவத் துறையின் அடுத்த மைல்கல்!
Incredible achievement Heart surgery newborn baby next milestone Indian medicine
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஒரு மருத்துவத் தம்பதிக்கு நீண்டநாள் காத்திருப்புக்குப் பின் மகப்பேறு எனும் மகிழ்ச்சி கிடைத்தது. 33 வயதில் கர்ப்பம் தரித்த அந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பரிசோதனைகளின் போது, கருவில் உள்ள குழந்தைக்கு அரிய வகை பிறவிக்குரிய இதயக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த குறைபாடு, நுரையீரலிலிருந்து வரும் ஆக்சிஜன் நிறைந்த இரத்தம் இயல்பான பாதையில் இதயத்துக்கு செல்லாமல் தடுக்கும் தன்மை கொண்டது. இத்தகைய நிலைக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தீவிர விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும், பிறந்த உடனேயே சரியான நேரத்தில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டால் குழந்தையை காப்பாற்ற முடியும் என்றும் கே.எஸ்.அய்யர் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட பெற்றோர், சிகிச்சை நடைபெறும் Fortis Escorts Heart Institute அருகே குடிபெயர்ந்து தங்கினர். தொடர்ந்து, கர்ப்ப காலம் முழுவதும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் இதயநிலை கவனமாக கண்காணிக்கப்பட்டது.பின்னர் பிரசவ நாள் வந்தபோது, அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.
எனினும், பிறந்தவுடன் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக செயற்கை சுவாச உதவி அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறியப்பட்ட இதயக் குறைபாடு உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மறுநாளே திறந்த இதய அறுவைச் சிகிச்சைக்கு அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிபுணர் மருத்துவர்கள் குழு இணைந்து செயல்பட்ட இந்த சிகிச்சை சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது. அறுவைச் சிகிச்சையின் போது, ஆக்சிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் இதயத்தின் இடது பகுதி நோக்கி சீராக மாற்றப்பட்டது.
இதன் மூலம் குழந்தை உயிர் ஆபத்திலிருந்து மீட்கப்பட்டது.அறுவைச் சிகிச்சைக்கு பின் குழந்தையின் உடல்நிலை நாளுக்கு நாள் மேம்பட்டு வந்தது. சுமார் 11 நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைத்திருந்த பின்னர், குழந்தை முழுமையாக நலமடைந்ததால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறது.பிறந்த உடனேயே குழந்தைக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்வது மிகுந்த சவாலான செயலாகக் கருதப்படுகிறது.
இதனை வெற்றிகரமாக நிறைவேற்றிய மருத்துவர்கள் குழுவை பலரும் பாராட்டி வருகின்றனர். இத்தகைய பிறவிக் குறைபாடுகள் சுமார் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் என்பதும், அவசர சிகிச்சை மிகவும் அவசியமானது என்பதும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Incredible achievement Heart surgery newborn baby next milestone Indian medicine