பாஜகவிற்கு கட்சி தாவிய ஹர்பஜன் சிங்கிற்கு மத்திய சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு..!
Harbhajan Singh who defected to the BJP receives Central CRPF security
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சத்தா, ஸ்வாதி மலிவால், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஏழு நபர்கள், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் இந்திய அரசியல் வரலாற்றில் பேசும் பொருளாகியுள்ளது.
ஆம் ஆத்மியில் எம்.பி.க்களாக இருக்கும்போதே பாஜகவில் இணைந்தாலும், அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளது. அதற்கு காரணம், மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு 10 எம்.பி.க்கள் இருக்கும் சூழலில் மூன்றில் இரண்டு பங்கான 07 பேர் மொத்தமாக இணைந்ததால் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.
இந்நிலையில், பஞ்சாப் முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான பகவந்த் மான் உள்ளிட்டோர் குறித்த 07 பேரை துரோகிகள் என விமர்சித்துள்ளனர். அத்துடன், ஆம் ஆத்மி தொண்டர்களும் இவர்கள் மீதான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

அதன்படி, பஞ்சாப்பில் உள்ள ஹர்பஜன் சிங், அசோக் மிட்டல் மற்றும் ராஜேந்தர் குப்தா ஆகியோர் வீட்டின் முன் போராட்டங்களும் நடந்த நிலையில், அதிலும் குறிப்பாக ஹர்பஜன் சிங் வீட்டு சுவரில் 'துரோகி' என்று ஆம் ஆத்மி தொண்டர்கள் எழுதி எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில், ஹர்பஜன் சிங்க்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பை கடந்த சனிக்கிழமை அன்று பஞ்சாப் காவல்துறை விலக்கிக்கொண்டதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்தச் சூழலில், ஹர்பஜன் சிங் வீட்டிற்கு சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு வழங்கப்பட்டதால், மாநில காவல்துறை தனது பாதுகாப்பை வாபஸ் பெற்றதா அல்லது மாநிலக் காவல்துறை வாபஸ் பெற்றதால் அவருக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டதா எனும் தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும், ஆம் ஆத்மியில் இருந்து விலகி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் பாஜகவில் இணைந்த பிறகு அவருக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கியுள்ளமை கவனம் பெற்றுள்ளது.
English Summary
Harbhajan Singh who defected to the BJP receives Central CRPF security