சீடரை கற்பழித்த வழக்கு : ஆசரம் பாபு சாமியாருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
gujarat court order asaram babu life penalty for rape case
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல சாமியார் ஆசரம் பாபு. தன்னைத்தானே கடவுள் என்று அழைத்துக்கொள்ளும் இவருக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன.
அந்தவகையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத் புறநகரில் உள்ள ஆசிரமத்தில், சூரத் நகரை சேர்ந்த ஒரு பெண், சீடராக அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை சாமியார் ஆசரம் பாபு, தன்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி, போலீசார் ஆசரம் பாபு மற்றும் அவருடைய மனைவி உள்பட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் போது ஒருவர் உயிரிழந்து விட்டார். மீதமுள்ளவர்கள் ஏழு பேர் மீதும், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரணை செய்த, நீதிபதி டி.கே.சோனி, "சாமியார் ஆசரம் பாபு மீதான கற்பழிப்பு மற்றும் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி" என்று அறிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஆறு பேரையும் நீதிபதி விடுதலை செய்து, ஆசரம் பாபுவுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
அதன்படி, இன்று நீதிமன்றம் ஆசரம் பாபுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. தற்போது ஆசரம் பாபு, மற்றொரு கற்பழிப்பு வழக்கில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறையில் உள்ளார்.
English Summary
gujarat court order asaram babu life penalty for rape case