காமராஜரின் அரசியல் குரு... யார் இவர்? இன்று அவருடைய பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


சத்தியமூர்த்தி...!!

காமராஜரின் அரசியல் குரு. இந்திய விடுதலை வீரர். இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவரை பற்றிய சிறிய தொகுப்பு..!!

பிறப்பு :

சத்தியமூர்த்தி 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் செம்மனாம்பொட்டல் என்ற ஊரில் பிறந்தார்.

கல்வி : 

சத்தியமூர்த்தி நாடகம், இசை உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டவர். சமூக சீர்திருத்தச் சிந்தனை மிக்கவர் ஆவார். சென்னை கிறிஸ்த்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவர் சமஸ்கிருதத்தில் வல்லுநராகத் திகழ்ந்தார். இது மக்களாட்சி முறையில் இவருக்கு ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்தியது.

விடுதலை போராட்டத்தில் சத்தியமூர்த்தியின் பங்கு : 

சத்தியமூர்த்தி காங்கிரஸில் உறுப்பினராக சேர்ந்தார். பேச்சாற்றல் திறனைக் கொண்டு இருந்ததால் காங்கிரஸின் பிரதிநிதியாக மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் மற்றும் ரௌலத் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார் சத்தியமூர்த்தி.

சத்தியமூர்த்தி 1919ஆம் ஆண்டு திலகர், சீனிவாச சாஸ்திரி ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவுடன் இருமுறை இங்கிலாந்து சென்றார். பின்னர் 1920ஆம் ஆண்டு ஊர் ஊராகச் சென்று தன் பேச்சாற்றலால் மக்களிடம் சுதந்திர வேட்கையைப் பரப்பினார். சத்தியமூர்த்தி 1923ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானார்.

சத்தியமூர்த்தி 1926ஆம் ஆண்டு சுயராஜ்ஜியக் கட்சி சார்பில் இங்கிலாந்து சென்ற போது பல சொற்பொழிவுகளை அங்கு நிகழ்த்தினார். பாரதியின் கவிதைகளை அரசு 1928ஆம் ஆண்டு தடை செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் சத்தியமூர்த்தி ஆற்றிய உரை, வரலாற்றுச் சிறப்புமிக்கது. சத்தியமூர்த்தி 1930ஆம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

சத்தியமூர்த்தி காமராஜரின் அரசியல் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். 1936ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1939ஆம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார். சத்தியமூர்த்தி தமிழை ஆட்சி மொழியாக்க வாதாடியவர். பல மேடைகளில் கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பாவை தேசியப் பாடல்கள் பாடவைத்து மக்களிடம் சுதந்திர எழுச்சியை ஊட்டினார்.

சென்னையின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்துக்கு ஒப்புதல் பெற்று, ஓராண்டுக்குள் அடிக்கல் நாட்டினார்.

சத்தியமூர்த்தியின் மறைவு :

1942ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறைக்கு செல்லும்போது முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு மார்ச் 28, 1943ஆம் ஆண்டு சென்னை பொதுமருத்துவமனையில் மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Freedom fighter sathyamooethy birthday today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->