இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து..!
Free Trade Agreement signed between India and England
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொலைப்பேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: எனது நண்பர் பிரதமர் கெயர் ஸ்டார்மர் உடன் பேசுவதில் மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாக, இந்தியாவும் இங்கிலாந்தும் பரஸ்பர நன்மை பயக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது நமது விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும் என்றும், நமது இரு பொருளாதாரங்களிலும் வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை விரைவில் இந்தியாவிற்கு வரவேற்பதில் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவிக்காலத்தில் இருந்து இரு நாடுகளும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் முக்கியமாக இந்தியர்களுக்கான விசா பிரச்சனைகள் தீர்வு, கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறைப்பு ஆகியவையும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Free Trade Agreement signed between India and England