வங்கிகளில் கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 09 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ள அமலாக்கத்துறை..!
Enforcement Directorate questions Anil Ambani for 9 hours in bank loan fraud case
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. வயது 66. இவரது நிறுவனங்கள் வங்கிகளில் 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு சொந்தமான வீடு மற்றும் பல்வேறு நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த 17 ஆயிரம் கோடி ரூ. கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 09 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த மோசடி வழக்கு தொடர்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனை ஏற்று, டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று நண்பகல் அனில் அம்பானி ஆஜராகியுள்ளார்.
அதன் பின்னர், அவரிடம் அதிகாரிகள்சுமார் 09 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் போது கடன் மோசடி தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு பின் கிளம்பிச் சென்ற அவரை அடுத்தவாரம் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த விசாரணையின் போது அவரிடம், கடனை போலி நிறுவனங்களுக்கு திருப்பி விட்டது குறித்தும், அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டதா என்பது குறித்தும், அதிகாரிகளுக்கு லஞ்சம் ஏதும் வழங்கினாரா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவற்றில் பெரும்பாலான கேள்விக்கு தனக்கு தெரியாது என அனில் அம்பானி பதிலளித்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்த வழக்கில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் மூத்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும், விசாரணையின் போது அனில் அம்பானி உடன் வழக்கறிஞர் இருக்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அணில் அம்பானியின் 09 மணி நேர விசாரணை முழுவதும் வீடியோப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Enforcement Directorate questions Anil Ambani for 9 hours in bank loan fraud case