டெல்லி: ஆசிட் வீச்சு நாடகம் போட்ட இளம்பெண்! தந்தை போட்ட மாஸ்டர் பிளான் அம்பலம்!
Delhi acid attack drama
டெல்லி அசோக் விஹார் பகுதியில் ஆசிட் தாக்குதல் நடந்ததாக கூறிய வழக்கு, போலீசார் விசாரணையில் பொய்யானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் தேதி இளம் பெண் ஒருவர் தன் மீது ஆசிட் வீசப்பட்டதாக புகார் அளித்தார். இதில் ஓவியர் ஜிதேந்தர் மற்றும் அவரது உதவியாளர்கள் இஷான், அர்மான் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர். இதையடுத்து போலீசார் மூவரையும் விசாரணைக்கு அழைத்தனர்.
ஆனால், சிசிடிவி காட்சிகள் மற்றும் மொபைல் தொலைபேசி தரவுகளை ஆய்வு செய்தபோது, சம்பவம் நடந்த நேரத்தில் மூவரும் அந்த இடத்தில் இல்லையென வெளிச்சத்துக்கு வந்தது. இதன் மூலம் ஆசிட் வீச்சு சம்பவம் பொய் என்று உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில் “விசாரணையில், பாதிக்கப்பட்டதாக கூறிய பெண்ணின் தந்தை அகில் கான் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட ஓவியர் ஜிதேந்தர் இடையே பழைய தகராறு இருந்தது தெரியவந்தது. இதற்காக பழிவாங்கும் நோக்கில், அந்தப் பெண் தனது தந்தை, சகோதரர், மாமா ஆகியோருடன் சேர்ந்து இந்த ஆசிட் வீச்சு நாடகத்தை அமைத்துள்ளனர்.”
மேலும், ஜிதேந்தரின் மனைவி சில நாட்களுக்கு முன்பு அகில் கான் மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்திருந்ததும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. அதற்கு பதிலடியாகவே இந்த பொய்யான குற்றச்சாட்டு திட்டமிட்டதாக போலீசார் கூறினர்.
பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக தனது கைகளில் கழிப்பறை கிளீனரை ஊற்றி, ஆசிட் வீச்சு நடந்தது போல நடித்து இருந்ததாகவும் அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சதியில் ஈடுபட்ட அகில் கான் கைது செய்யப்பட்டு, மற்றவர்களையும் கைது செய்ய முயற்சி நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.