''வீணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய விவகாரம்; அமலாக்கத் துறை விசாரணை தொடர்பாக மாநில அரசு எதையும் தீர்மானிக்க முடியாது''; முதல்வர் வி.டி.சதீசன்..!
Chief Minister VD Satheesan stated that the State government has no role in the matter of the Enforcement Directorate issuing a summons to Veena
கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் (சிபிஎம்) மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் டி.வீணா. இவரின் செயல்பாட்டில் இல்லாத ஐடி நிறுவனமான ‘எக்ஸாலாஜிக்' மற்றும் சுரங்க நிறுவனமான சிஎம்ஆர்எல் ஆகியவற்றுக்கு இடையே நடந்த நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை கொச்சியிலுள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு வீணாவுக்கு அமலாக்கத்துறை முதன்முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இவருடன் சேர்த்து சிஎம்ஆர்எல் நிறுவனத் தலைவர் சசிதரன் கர்த்தா உட்பட 08 அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் வி.டி.சதீசன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது;

சுரங்க நிறுவனமான சிஎம்ஆர்எல் விசாரணையை நிறுத்தக் கோரி நீதிமன்றங்களை அணுகிய பின்னரே சட்ட நடைமுறைகள் தொடங்கின என்றும், அந்த மனுவும், அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டதால் அமலாக்கத் துறை விசாரணை தொடர வழி ஏற்பட்டது. அந்த வகையில், உயர் நீதிமன்றமே இந்த விவசாரணைக்கு வழி வகுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமலாக்கத் துறை விசாரணை தொடர்பாக மாநில அரசு எதையும் தீர்மானிக்க முடியாது என்றும், சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேப்போன்று, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தொழிலதிபர் கவுதம் அதானியுடன் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''எனக்கும் கவுதம் அதானிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது வணிக குழுமத்துடனும்கூட எனக்கு எந்த தொடர்பும் இல்லை'' என கூறியுள்ளார்.
English Summary
Chief Minister VD Satheesan stated that the State government has no role in the matter of the Enforcement Directorate issuing a summons to Veena