''2030-ஆம் ஆண்டுக்குள் புதுச்சேரியை காசநோய் இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்''; முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை..!
Chief Minister Rangasamy expresses confidence that Puducherry can be made tuberculosis free by 2030
''புதுச்சேரியை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்'' என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மரபணு வரிசைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காசநோய் நோயாளிகளுக்கு மருந்து உணர்திறன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பான 03 நாட்கள் கொண்ட தேசிய மாநாட்டை ஜிப்மரில் முதல்வர் ரங்கசாமி இன்று தொடக்கி வைத்தார்.
அப்போது அங்கு பேசிய முதல்வர் கூறியதாவது; ''இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். காசநோய் ஒழிப்பு மத்திய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
2015 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில். புதுச்சேரியில் காசநோய் பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், புதுச்சேரியில் உள்ள 148 கிராமங்களில் 36 கிராமங்கள் ஏற்கெனவே காசநோய் இல்லாத கிராமங்களாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்னும் பல கிராமங்களை வரும் ஆண்டுகளில் காசநோய் இல்லாத கிராமங்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் புதுச்சேரியை காசநோய் இல்லாத பிரதேசமாக மாற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னார்வ அமைப்புகள் மூலம் ஊட்டச்சத்து உணவுகள் தரப்படுகின்றன என்றும், காசநோயை ஒழிப்பது 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் தேசிய இலக்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி பேசுகையில் கூறியதாவது;
காசநோய் கண்டறியப்படும் ஒவ்வொரு நோயாளிக்கும் மருந்து எதிர்ப்புப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதில், அனைத்து நோயாளிகளுக்குமான மருந்து உணர்திறன் பரிசோதனை (UDST) முக்கியப் பங்கு வகிக்கிறதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், மருந்து எதிர்ப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உரிய சிகிச்சை முடிவுகளை மேற்கொள்ளவும், சிகிச்சை தோல்வி மற்றும் மருந்து எதிர்ப்புக் காசநோய் பரவலைக் குறைக்கவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அடுத்த தலைமுறை மரபணு வரிசைமுறை தொழில்நுட்பம் (TNGS), மருந்து எதிர்ப்புடன் தொடர்புடைய மரபணு மாற்றங்களை விரிவாகக் கண்டறிய உதவுவதன் மூலம் காசநோய் நோயறிதலை வலுப்படுத்துவதோடு, சிகிச்சை முடிவுகளை மேற்கொள்வதற்குத் தேவையான மருத்துவத் தகவல்களையும் வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் பாலிசி ரெசிலியன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர் நந்திஷ் பேத்தானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
English Summary
Chief Minister Rangasamy expresses confidence that Puducherry can be made tuberculosis free by 2030