05 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் டீசல் விலை உயருமா..? மத்திய அரசு விளக்கம்..!
Central Government Clarifies Rumors of Diesel Price Hike Following Results of 5 State Elections
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நிறுத்துவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. எனினும், இதுவரை சுமூகமான உடன்பாடும் ஏற்படவில்லை. உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்தும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் உலகளாவிய அளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக சமீபத்தில் ப்ரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. அதன்படி, நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 05-வும், டீசலுக்கு ரூ. 03-வும் உயர்த்துவதாக அறிவித்திருந்தது.
ஆனால், அடுத்த சில நாட்களில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 13 கலால் வரியை ரூ. 03 ஆகக் குறைக்கப்பட்டது. டீசலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்ட நிலையில், முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஐந்து மாநிலங்களுக்கான (தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம்) சட்டப்பேரவைத் தேர்தல் நாளையுடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே 04 மாநிலங்களில் தேர்தல் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் நாளை இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்துடன், ஐந்து மாநிலத் தேர்தல்களும் முடிவுக்கு வரவுள்ளது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் மே 04-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில், ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்த இருப்பதாக செய்திகள்பரவி வருகிறது. இதனால், பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இவாறான செய்திகள் வதந்திகள் எனவும், விலை மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய விலை உயர்வு குறித்த யூகங்களுக்கு மத்தியில், மேற்கு வங்கத்தில் நாளை வாக்குப்பதிவு முடிந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறியதாவது;
''அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கையிருப்பு இருப்பதை உறுதி செய்வதற்கும், பொருட்கள் தீர்ந்துபோகாமல் இருப்பதற்கும், விநியோகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்துவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை. தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம். பீதியுடன் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். அதிகாரப்பூர்வமான தகவல்களையே நம்புங்கள். விலை நிலையாக உள்ளது. மேலும் விலைகளில் எந்த உயர்வும் இல்லை''என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Central Government Clarifies Rumors of Diesel Price Hike Following Results of 5 State Elections