'79 ஆண்டுகாலக் காத்திருப்புக்குக் கிடைத்த விடிவுகாலம்'...! - ஊருக்கே வந்த அரசுப் பேருந்தை திருவிழா போலக் கொண்டாடிய மக்கள்...!
break after 79 years waiting People celebrated government bus that came town like festival
இந்தியா சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகள் கடந்துவிட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இலவசப் பேருந்து பயணம், கட்டணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இன்னும் சில கிராமங்களுக்கு அடிப்படை போக்குவரத்து வசதியே முழுமையாக சென்றடையவில்லை என்பது வேதனைக்குரிய நிலையாக உள்ளது.அதற்கு சாட்சியாக ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள குர்தால் கிராமம் அமைந்துள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற 79 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அந்த கிராமத்திற்குள் முதல்முறையாக அரசு பேருந்து சேவை தொடங்கியுள்ளது.குர்தால் கிராமத்தில் இதுவரை அரசு பேருந்து வசதி இல்லாததால், அங்கு வசிக்கும் மக்கள் அருகிலுள்ள நகரங்கள், சந்தைகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்ல கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளுக்காக சுமார் 10 கிலோமீட்டர் வரை நடந்தே செல்ல வேண்டிய நிலை இருந்துள்ளது. சில நேரங்களில் தனியார் வாகனங்களை நாடியபோதும், அதற்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குர்தால் கிராமத்திற்கு முதல்முறையாக அரசு பேருந்து இயக்கப்பட்டது. பேருந்து தங்கள் கிராமத்திற்குள் வருவதை அறிந்த மக்கள், வயது வித்தியாசமின்றி அனைவரும் திரண்டு உற்சாகத்துடன் வரவேற்றனர்.பேருந்து கிராமத்திற்குள் நுழைந்தபோது பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் சாலையில் திரண்டு நின்றனர்.
மேளதாளங்கள் முழங்க, ஆடிப்பாடி மகிழ்ந்த மக்கள் பேருந்தை உற்சாகத்துடன் வரவேற்றனர். சிலர் தங்கள் செல்பேசிகளில் இந்த மகிழ்ச்சியான தருணத்தை காணொளியாக பதிவு செய்தனர். இதனால் கிராமமே திருவிழாக் கோலம் பூண்டது போல் காட்சியளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அரசு பேருந்து சேவை தொடங்கியுள்ளதால், அருகிலுள்ள நகரங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இனி எளிதாகச் செல்ல முடியும் என்று குர்தால் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.பல ஆண்டுகளாக போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்ட தங்களுக்கு, இந்தப் பேருந்து சேவை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சுதந்திரம் பெற்ற 79 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு கிராமத்திற்கு அரசு பேருந்து சேவை சென்றடையாமல் இருந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.குர்தால் கிராமத்தைப் போன்றே நாட்டின் பல பகுதிகளில் இன்னும் சாலை, போக்குவரத்து, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக காத்திருக்கும் கிராமங்கள் இருக்கக்கூடும்.
எனவே, நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து, அவர்களுக்கும் சமமான வசதிகள் கிடைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
break after 79 years waiting People celebrated government bus that came town like festival