ஆமதாபாத் விமான விபத்து: உயிரிழந்த 204 பேர் உடல்கள் மீட்பு; ஒருவர் உயிர் பிழைத்த அதிசயம்; சிதைந்த உடல்களை டி.என்.ஏ பரிசோதனை மூலம் கண்டறிய ஏற்பாடு..! - Seithipunal
Seithipunal


ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என 241 பேரும் பலியாகியுள்ளனர். இதில், உயிரிழந்த பயணிகளில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவராவர்.

விமானம் புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் விமான நிலையம் அருகே இருந்த மருத்துவ கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான போயிங் விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 43 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த 07 பேர் பயணித்துள்ளனர். அவர்களுடன் 12 ஊழியர்களும் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகிறது.

இதுவரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிலரது சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளன. அவற்றை உறவினர்கள் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் கண்டறிய மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதில், லண்டனில் இருக்கும் தன் குடும்பத்தினரை பார்ப்பதற்காக குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் புறப்பட்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக இன்று இரவு 07 மணியளவில் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ எனப்படும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வாலும், கிளிவ் குந்தரும் இயக்கியுள்ளனர். சுமீத் சபர்வால் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. துணை விமானிக்கு 1100 மணி நேரம் விமானத்தை இயக்கியுள்ளார்.

இந்த விமானம் இந்திய நேரப்படி 01: 39 மணிக்கு விமானம் 23-வது ஓடுபாதையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு (ஏடிசி) அவசர அழைப்பு வந்துள்ளது. பிறகு, ஏடிசி முயற்சி செய்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்பிய உடனே, விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் கடுமையான புகை மூட்டமாக காணப்படுகிறதாக டிஜிசிஏ விளக்கம் அளித்துள்ளது.

குறித்த விமானம் நொறுங்கி விழுந்ததில், அந்த இடத்தில் அமைந்திருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த 05 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சுற்று வட்டார குடியிருப்புகளில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.

விபத்தை தொடர்ந்து, ஆமதாபாத் சிவில் மருத்துவமனை அதிர்ச்சி (அவசர) மையத்தில் நோயாளி தொடர்பான தகவலுக்கு தொடர்பு கொள்ள மருத்துவமனை நிர்வாகம், 6357373831, 6357373841 ஆகிய இரண்டு ஹெல்ப்லைன் எண்கள் வெளியிட்டுள்ளது.

ஆமதாபாத்தில் விமான விபத்தைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அவர்களை ஆமதாபாத் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், விமான விபத்து நடந்த இடத்திற்கு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்துள்ளதோடு, நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார்.

அத்துடன், மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்ய ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என நிருபர்களிடம் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ராம் மோகன் நாயுடுவை தொடர்ந்து, விமான விபத்து நடந்த இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிதலைவர் ராகுல் உள்ளிட்ட இந்திய தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆஸி., பிரதமர் அந்தோணி அல்போன்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன் அறிக்கை வெளியிட்டு கூறியுள்ளார். அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்பதுடன், அவர்களுக்கு தேவையான உதவி செய்து தரப்படும் என்றும், பிஜே மருத்துவ கல்லூரி விடுதியை கட்டுவதற்கு தேவையான உதவியையும் செய்வோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் சென்ற 242 பேரில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. 38 வயதான நபர் ஒருவர் அவசர வழிக்கதவு வழியாக குதித்து உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு உயிர் தப்பியவர் ரமேஷ் விஸ்வாஸ் குமார் என தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bodies of 204 people killed in Ahmedabad plane crash recovered one miraculously survives


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->