தலைமை நீதிபதி மீது செருப்பை வீச முயன்ற வழக்கறிஞர் மீது சட்ட நடவடிக்கை: அட்டர்னி ஜெனரல் அனுமதி..!
Attorney General approves legal action against lawyer who tried to throw shoe at Chief Justice
கடந்த 06-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கமான பணிகள் தொடங்கியபோது, நீதிமன்ற எண் 01-இல் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரணையில் ஈடுபட்டு இருந்தது. அப்போது ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணியை வீசி தலைமை நீதிபதியை தாக்க முயன்றார். உடனடியாக பாதுகாவலர்கள் அதனை தடுத்ததுடன், அவரை வெளியேற்றினர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலத்தின் கஜூராகோவில் உள்ள கிருஷ்ணர் சிலையை சீரமைப்பது தொடர்பான வழக்கில் கவாய் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த செயலில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோர் தெரிவித்துள்ளதோடு, இதற்காக தான் வருத்தப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி கவாய் கூறுகையில், 'காலணி வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பார் கவுன்சிலில் இருந்து ராஜேஷ் கிஷோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் விகாஸ் சிங், 'ராஜேஷ் கிஷோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ' எனக்கோரியிருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி அவருக்கு எழுதிய கடிதத்தில், '' சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞரின் செயல்களும் பேச்சுகளும் அவதூறானது மட்டும் அல்ல. உச்ச நீதிமன்றத்தின் மகத்துவத்தையும், அதிகாரத்தையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் உள்ளன. இதுபோன்ற நடத்தை நீதி வழங்கும் அமைப்பின் அடித்தளத்தையே தாக்குகிறது'' எனக்கூறியுள்ளதுடன், குற்றவியல் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க அட்டர்னி ஜெனரல் அனுமதி வழங்கிய தகவலை, உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
English Summary
Attorney General approves legal action against lawyer who tried to throw shoe at Chief Justice