77-வது குடியரசு தின விழா; சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்; முகத்தை அடையாளம் காணும் வகையில் 'ஏஐ' தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு தீவிரம்..!
At the 77th Republic Day celebrations surveillance is intensified with AI technology for facial recognition
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. அதன்படி, டெல்லி கடமைப் பாதையில் நாளை காலை 10.30 மணிக்கு பிரம்மாண்டமான அணிவகுப்பு தொடங்க உள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு விழாவில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில், கடமைப் பாதையில், நாளை காலை 09.30 மணிக்கு பிரதமர் மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும். இந்த நிகழ்வில் ஒன்றிய அரசின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த ஆண்டு 150 ஆண்டுகால வந்தே மாதரம் மற்றும் தற்சார்பு இந்தியா என்ற மையக்கருத்துக்களின் அடிப்படையில் விழா நடைபெறவுள்ளது. அப்போது ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானங்கள் மற்றும் டி-90 பீரங்கிகள் அணிவகுப்பில் இடம் பெறவுள்ளன. வரலாற்றிலேயே முதல் முறையாக சிஆர்பிஎப் ஆண்கள் படைப்பிரிவை பெண் அதிகாரி ஒருவர் தலைமையேற்று வழிநடத்திச் செலவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த குடியரசு விழா அணிவகுப்பின் போது, நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை விளக்கும் வகையில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் சார்பில் சுமார் 30 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் வரவுள்ளன. அத்துடன், 2,500 கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ரஃபேல், சுகோய் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

அத்துடன், அரசின் திட்ட பயனாளிகள் உள்ளிட்ட சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்கள் இந்த விழாவை நேரில் காண அழைக்கப்பட்டுள்ளனர். விழா பாதுகாப்பிற்காக டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், முதல் முறையாக முகத்தை அடையாளம் காணும் வசதி கொண்ட 'ஏஐ' ஸ்மார்ட் கிளாஸ் அணிந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
குடியரு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. வரும் 29-ஆம் தேதி விஜய் சவுக் பகுதியில் நடைபெறும் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியுடன் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நிறைவடையும். தலைநகர் டெல்லியில் குடியரசு தினம் கொண்டாடப்படுவது போன்று, நாடு முழுவதும் விழாவிற்கான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
English Summary
At the 77th Republic Day celebrations surveillance is intensified with AI technology for facial recognition