டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: ஹரியானாவில் சிக்கிய மற்றுமொரு ஸ்போர்ட் கார்..!
Another car seized in Haryana in connection with the Delhi car blast incident
தலைநகர் டில்லியில் நேற்று முன்தினம் ( நவம்பர் 10) செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சதிகாரர்களின் சிவப்பு நிற போர்டு ஈகோ ஸ்போர்ட் கார் ஒன்று ஹரியானாவின் கண்ட்வாலி கிராமத்தில் சிக்கியுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகள் வெடிக்க வைத்தது ஹூண்டாய் ஐ 20 கார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் போது வெடிமருந்து பறிமுதல் விவகாரத்தில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் உமர் உன் நபி என்பவனுக்கு கார் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் முக்கிய பங்கு உண்டு என்று தெரியவந்துள்ளது.

இவனின் கூட்டாளிகள் பிடிபட்டதும், இவன் காரில் டெட்டனேட்டர் மற்றும் வெடிபொருட்களை எடுத்து வந்து வெடிக்க வைத்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவனும் உயிரிழந்திருக்கலாம் எனத் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை உறுதி செய்வதற்காக உமர் உன் உபியின் தாயாரின் டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் சிவப்பு நிறத்தில் போர்டு ஈகோ ஸ்போர்ட் கார் ஒன்று வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். DL10CK0458 என்ற பதிவெண் கொண்ட இந்தக் கார், டில்லி ரஜோரி கார்டனில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் 2017-ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் கொடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களில் உள்ள முகவரிக்கு போலீசார் சென்ற போது, அங்கு கார் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.

குறித்த காரை கண்டுபிடிப்பதற்காக டில்லி முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேசன்கள், சோதனைச்சாவடிகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டன. இதற்காக போலீசார் 05 குழுக்களை அமைத்து மாயமான காரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அண்டை மாநிலங்களான உ.பி., மற்றும் ஹரியானா மாநில போலீசாரின் உதவி நாடப்பட்டது.
அதன்படி, நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு, ஹரியானாவின் கண்ட்வாலி கிராமத்தில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் இந்தக் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். குறித்த கார், உமர் உன் நபி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
முக்கிய குற்றவாளியான உமர், குண்டுவெடிப்பு சம்பவத்தை டிசம்பர் 06 அன்று நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வெடிமருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Another car seized in Haryana in connection with the Delhi car blast incident