ஆசிய பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு வந்துள்ள அதானி..!
Adani Surpasses Ambani to Claim the Top Spot on the List of Asias Richest People
முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி ஆசியப் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இவரது சொத்து மதிப்பு $92.6 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அவர் 19-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
நேற்று 16-ஆம் தேதி, ஒரே நாளில் அதானி குழுமப் பங்குகளின் உயர்வால் இவரது சொத்து மதிப்பு சுமார் $3.56 பில்லியன் அதிகரித்தது. தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் மட்டும், அதானி டோட்டல் கேஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி பவர் போன்ற பங்குகள் 3% வரை உயர்வை கண்டுள்ளன. அத்தோடு, கடந்த வருடம் அதானி குழுமப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், இந்த வருடம் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தற்போது ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி $90.8 பில்லியன் சொத்து மதிப்புடன், ஆசிய அளவில் 02-வது இடத்திற்கும், உலகளவில் 20-வது இடத்திற்கும் சரிந்துள்ளார். அதேப்போன்று உலகப்பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் $656 பில்லியனுடன் முதலிடத்திலும், $286 பில்லியனுடன் லேரி பேஜ் 2-வது இடத்திலும் உள்ளனர்.
இந்தப் பட்டியலில், லட்சுமி மிட்டல் $36.9 பில்லியன் (62-வது இடம்), ஷிவ் நாடார் $33.5 பில்லியன் (70-வது இடம்), சாபூர் மிஸ்திரி $33.2 பில்லியன் (71-வது இடம்), சாவித்ரி ஜிண்டால் $32.7 பில்லியன் (73-வது இடம்) ஆகிய இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, 2026-இல் புவிசார் அரசியல் பதற்றங்களால் பலரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. குறிப்பாக LVMH சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் அதிகபட்சமாக $44 பில்லியனை இழந்துள்ளார். பில் கேட்ஸ், வாரன் பபெட் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோரின் சொத்துக்களிலும் சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Adani Surpasses Ambani to Claim the Top Spot on the List of Asias Richest People