ஆதார் குடியுரிமை ஆவணமாகாது - உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம்!
Aadhar case SC EC
பிகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கில், ஆதார் சரியான குடியுரிமை ஆவணமாகாது என்ற தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிகாரில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில், 2003 ஜனவரி 1-ஆம் தேதியிலான வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை. ஆனால் பெயர் இல்லாதவர்கள் பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்ற விதி விதிக்கப்பட்டது.
இந்த விதியை எதிர்த்து, ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவையும் குடியுரிமை ஆவணங்களாக ஏற்கப்பட வேண்டும் என பல்வேறு கட்சிகள் மற்றும் ஜனநாயக சீர் திருத்த சங்கம் (ADR) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. கடந்த ஜூலை மாத விசாரணையில், உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் இந்த ஆவணங்களையும் பரிசீலிக்கலாம் என்று பரிந்துரைத்தது.
அதன்படி தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை குடியுரிமையை நிரூபிக்க போதுமான ஆவணங்களாகாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதன் மூலம், பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், பெயர் சேர்க்க விரும்பும் புதிய வாக்காளர்கள் கட்டாயமாக பிறப்புச் சான்றிதழ் அல்லது கடவுச்சீட்டு போன்ற நேரடி குடியுரிமை ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது தெளிவானது.