உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நபரை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லமுன் உறவுகார பெண்ணை ஆம்புலன்சை கழுவ சொன்ன அவலம்; அதிர்ச்சி வீடியோ வைரல்..!
A video has gone viral showing a female relative being asked to wash an ambulance before a critically ill patient was transported to another hospital
மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டம் கரேலா கிராமத்தைச் சேர்ந்த ராகுல் பர்மன் (32), இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் கட்னி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்துள்ளது. இதனால், அவரை மேல் சிகிச்சைக்காக ஜபல்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்காக ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், படுகாயமடைந்த அந்த நோயாளியை அழைத்துச் செல்வதற்கு முன்பாக, அவரது பெண் உறவினரை ஆம்புலன்ஸை கழுவி சுத்தம் செய்ய ஊழியர்கள் வற்புறுத்திய வீடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் ஊழியர் ஒருவர் அருகில் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் ஆம்புலன்ஸைக் கழுவும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வப் புகார் ஏதும் வரவில்லை. இருப்பினும், இந்த வீடியோவின் அடிப்படையில் அதிகாரிகள் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்தப் பெண்ணிடம் ஊழியர்கள் பணம் கேட்டார்களா அல்லது வண்டியைச் சுத்தம் செய்தால்தான் நோயாளியை ஏற்றிச் செல்ல முடியும் என நிபந்தனை விதித்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
A video has gone viral showing a female relative being asked to wash an ambulance before a critically ill patient was transported to another hospital