செல்போன் மோகத்திற்கு எதிராக 16 கி.மீ ஓடிய 4-ஆம் வகுப்பு மாணவன்: மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி சம்பவம்!
4th Grade Student Runs 16 KM to School to Raise Awareness Against Mobile Phone Addiction
நவீன டிஜிட்டல் உலகில் குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் செல்போன் கேமராக்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாகப் பதிவு செய்யப்படுகின்றன. முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு நிலவைக் காட்டியும், காகம் கதைகள் சொல்லியும் உணவூட்டிய பெற்றோர், இன்று தங்களின் வசதிக்காகச் சிறுவர்களைச் சமாதானப்படுத்தவும், சோறூட்டவும் செல்போன்களை ஒரு முக்கியக் கருவியாக மாற்றிவிட்டனர்.
இதன் அபாயகரமான விளைவாக, குழந்தைகளுக்குத் தீவிர மன இறுக்கம் (Autism) மற்றும் மூளை வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்படுவதாகக் குழந்தை நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் செல்போன் பயன்படுத்தத் தடை விதிப்பது குறித்துப் பல்வேறு மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. மேலும், உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே பள்ளிகளில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4-ஆம் வகுப்பு மாணவனின் சாதனைப் பயணம்
இத்தகைய செல்போன் மோகத்திற்கு எதிராகவும், சிறுவர்கள் மத்தியில் உடல் தகுதி, ஒழுக்கம் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் வெளிப்புற விளையாட்டுகளில் ஆர்வத்தை வளர்க்கவும் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் ஒரு நெகிழ்ச்சியான விழிப்புணர்வுப் போராட்டம் நடந்துள்ளது. அங்குள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கான காப்பகத்தில் தங்கிப் படிக்கும் 10 வயதுடைய 4-ஆம் வகுப்பு மாணவன் அரவிந்த் ரத்தோடு, தனது பள்ளி திறக்கும் முதல் நாளன்று சுமார் 16 கி.மீ. தூரத்தைப் பள்ளிக்கு ஓடியே கடந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளான்.
பின்னணி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நாடோடி இனக் குழுக்கள் மற்றும் வறுமையின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட ஏழை விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் சிறப்பு வாய்ந்த காப்பகத்தில் அரவிந்த் ரத்தோடு வளர்ந்து வருகிறான்.
பொதுமக்கள் பாராட்டு
சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர்களின் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு ஓட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சமூக நற்பணிக்காக 16 கிலோமீட்டர் தூரத்தைத் தொய்வின்றி ஓடிக் கடந்த இந்தச் சிறுவனின் அசாத்திய மன உறுதியைக் கண்டு, உள்ளூர் மக்கள் அவனுக்குத் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
English Summary
4th Grade Student Runs 16 KM to School to Raise Awareness Against Mobile Phone Addiction